ஒமைக்ரான் வைரஸ் : 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடு
உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸான பி.1.1.529 என்ற ஒமைக்ரான், தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க, 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள், கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இருந்தாலும், தமிழகம் வந்திறங்கிய பிறகு இவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும். இதில், தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டாலும் கூட ஏழு நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எட்டாம் நாள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் நெகடிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே வெளியே செல்லலாம். ஒருவேளை கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானால், பயணியின், மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அப்போது அவர்கள் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். மரபணு பரிசோதனையில் ஒமைக்ரான் இல்லை என உறுதி செய்யப்பட்டால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.
இதற்காக சென்னை, கோவை, மதுரை, திருச்சி என நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும், ஒரு சுகாதார திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக என அரசு அறிவித்துள்ளது. அரசு பட்டியலிட்ட 12 நாடுகளை தவிர பிற நாடுகளில் இருந்து வருபவர்களும் கொரோனா நெகடிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் இவர்களில் 5 சதவீதம் பேருக்கு மட்டும் விமானநிலையத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒமைக்ரான் கொரோனா உறுதி செய்யப்பட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் வரும் பயணிகளுக்கு கோவை விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பயணிகளிடம் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரிகள் உடனுக்குடன் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு வருவதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.