6 ஆண்டுகளில் 5 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டன
கடந்த 6 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மாநில வாரியாக மூடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறைக்கான இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் திங்கள்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தற்போது வரை 5,00,506 நிறுவனங்கள் மூடப்பட்டன. அதே காலகட்டத்தில் 7,17,049 புதிய நிறுவனங்கள் 2013-ஆம் ஆண்டைய நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் 1 முதலான காலகட்டத்தில் 22,557 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் 1,09,098 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 6 ஆண்டுகளில் 2017-18ஆம் நிதியாண்டில் அதிக அளவாக 2,36,262 நிறுவங்கள் மூடப்பட்டன. 2018-19இல் 1,43,233 நிறுவனங்கள் மூடப்பட்டன. 2016-17இல் 12,808 நிறுவனங்களும், 2019-20இல் 70,972 நிறுவனங்களும் கடந்த நிதியாண்டில் 14,674 நிறுவனங்களும் மூடப்பட்டன.
அரசுக்கு கிடைத்த தகவல்படி கடந்த நிதியாண்டில் 1,55,377 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டன. 2019-20இல் இந்த எண்ணிக்கை 1,22,721ஆக இருந்தது. 2016-17இல் 97,840 நிறுவனங்களும், 2017-18-இல் 1,08,075 நிறுவனங்களும், 2018-19இல் 1,23,938 நிறுவனங்களும் புதிதாகத் தொடங்கப்பட்டன என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.
நம் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வெளியே மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளும் பெருநகர சமூகப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழ் வருமா என்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் விவரம்:
நிறுவனங்கள் (பெருநிறுவன சமூக பொறுப்புகள்) விதிகளின்படி இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிப்பதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் சிஎஸ்ஆர் திட்ட நடவடிக்கையாக கருதப்படாது.
சட்டப்படி நிறுவனங்கள் தங்கள் மூன்று ஆண்டு சராசரி வருடாந்திர நிகர லாபத்தில் குறைந்தபட்சம் இரண்டு சதவீத தொகையை பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டும்.
பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான சட்டப் பிரிவுகளில் எங்குமே அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை. எனினும், பெருநிறுவன சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளை நிறுவனங்கள் தாங்களாகவே அமல்படுத்தவும் முடியும்; என்ஜிஓ போன்ற அமலாக்க அமைப்புகள் மூலமும் அமல்படுத்த முடியும். அதுபோன்ற அமைப்புகளை அரசிடம் பதிவு செய்வது கடந்த ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 31 வரை 17,130 அமலாக்க அமைப்புகள் அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிறுவனங்கள் மத்திய அரசிடம் பதிவு செய்த தகவலின்படி பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் நிறுவனங்கள் 2018-19ஆம் ஆண்டில் ரூ.20,150.27 கோடியையும், 2019-20ஆம் ஆண்டில் 24,688.66 கோடியையும், 2020-21இல் ரூ.8,828.11 கோடியையும் செலவிட்டுள்ளன. இந்தத் தொகைகளில் 60 சதவீத செலவானது அமலாக்க அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பதிலில் அவர் தெரிவித்துள்ளார்.