அபித், அப்துல்லா அதிரடியில் பாகிஸ்தான் அபார வெற்றி!
வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதன்பின் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 44 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி அஃப்ரிடியின் பந்துவீச்சில் வீழ்ந்தது.
இதனால் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அபித் அலி – அப்துல்லா ஷஃபிக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
இதன்மூலம் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 109 ரன்களைச் சேர்த்தது. பின் நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் அபித் அலி 56 ரன்களுடனும், அப்துல்லா ஷஃபிக் 53 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர்.
இதில் சதமடிப்பார்கள் என்று எதிர்பார்க்கட்ட அபித் அலி 91 ரன்னிலும், அப்துல்லா ஷஃபிக் 73 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் அடுத்து வந்த அசார் அலி, கேப்டன் பாபர் ஆசாம் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற காணக்கில் முன்னிலைப் பெற்றது.