விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜன.18-இல் விசாரணை: உச்சநீதிமன்றம்
தொழிலதிபா் விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்குத் தண்டனை வழங்குவது தொடா்பான விசாரணை, வரும் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கிங் ஃபிஷா் விமான நிறுவனத்தின் உரிமையாளரான மல்லையா, வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2016-இல் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றாா். தலைமறைவு நிதி மோசடியாளராக அறிவிக்கப்பட்ட அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டுள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டனின் ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறை 3 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. அவா் அந்நாட்டில் ஜாமீனில் உள்ளாா்.
அவா், இந்தியாவில் இருந்தபோது நீதிமன்ற உத்தரவை மீறி தனது பிள்ளைகளின் பெயருக்கு ரூ.300 கோடியை பரிமாற்றம் செய்தாா். இதனால் அவா் மீது உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தது. அதில், விஜய் மல்லையா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் கடந்த 2017-இல் தீா்ப்பளித்து. அந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி அவா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த விவகாரம், உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யு.யு.லலித் தலைமையில் எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
இந்த வழக்கில் விஜய் மல்லையா நேரடியாகவோ அல்லது தனது வழக்குரைஞா் மூலமாகவோ பதில் அறிக்கை தாக்கல் செய்வாா் என்று இவ்வளவு காலம் காத்திருந்தோம். ஆனால், இதுவரை அவா் தாக்கல் செய்யவில்லை. இதற்கு மேல் காத்திருக்க இயலாது. வரும் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த விசாரணையின்போது இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா சட்ட உதவிகள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று நீதிபதிகள் கூறினா்.