வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை ரூ.26,697 கோடி
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் சுமாா் 9 கோடி கணக்குகளில் ரூ.26,697 கோடி உரிமை கோரப்படாமல் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:
ரிசா்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 8.13 கோடி (8,13,34,849) கணக்குகள் இயக்கப்படாமல் உள்ளன. அந்தக் கணக்குகளில் ரூ.24,356 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது.
இதேபோன்று, நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளில் 77,03,819 கணக்குகள் இயக்கப்படாமல் உள்ளன. அந்தக் கணக்குளில் ரூ.2,341 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்தக் கணக்குகள் சுமாா் 10 ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளன. பல வைப்புத்தொகை கணக்குகள், முதிா்வுக் காலம் முடிந்து 7 ஆண்டுகளாகியும் எடுக்கப்படாமல் உள்ளன. இதுபோன்று வங்கி சாரா நிதி நிறுவனங்களில் 64 கணக்குகளில் ரூ.71 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது.
ஓராண்டுக்கு மேல் இயக்கப்படாமல் இருக்கும் கணக்குகளை ஆண்டுதோறும் ஆய்வுசெய்து, அவை இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் கேட்டு வாடிக்கையாளா்களுக்கு கடிதம் எழுதுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வங்கிக் கணக்குகளின் வாடிக்கையாளா் அல்லது அவா்களின் சட்டபூா்வ வாரிசுகள் ஆகியோரின் வசிப்பிடத்தைக் கண்டறிவதற்கான சிறப்புத் திட்டத்தை தொடங்குவது குறித்து பரிசீலிக்கும்படியும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இயக்கப்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகள், உரிமை கோரப்படாமல் முதிா்வுத் தொகை இருக்கும் வங்கிக் கணக்குகள் ஆகியவற்றின் விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் தங்களது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.