அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்ட முன்னேற்ற மீளாய்வுக் குழுக் கூட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடப்பாண்டில் அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் திட்ட மீளாய்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(01) மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் 42 அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளால் தங்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் தன்மைகள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக விளக்கமளித்தனர்.
மேலும் இதன்போது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்றுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மேலதிக அரசாங்க அதிபர் நன்றிகளைத் தெரிவித்ததுடன் கொவிட் 19 இடர்காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புக்களையும் நன்றிபாராட்டி நினைவுகூர்ந்தார்.
குறித்த கலந்துரையாடலில், திட்டமிடல் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், குறித்த திட்டங்களுடன் தொடர்பபடம் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.