எரிவாயு சிலின்டர் வெடிப்புச் சம்பவங்கள் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டம்.
எரிவாயு சிலின்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருந்து இடம்பெறுகின்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டம் பாராளுமன்றம் இன்று (01) நடைபெற்றது.
இந்தக் கூட்டம் வர்த்தக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றதுடன், இதில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவும் கலந்துகொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று (30) எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகள் தொடர்பிலும், இதனுடன் தொடர்புபட்ட ஏனைய தரப்பினர்களையும் இணைத்துக் கொண்டு கலந்துரையாடும் நோக்கிலும் வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இந்த விசேட கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் வர்த்தக அமைச்சு, கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு, இலங்கை பொலிஸ், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை, அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம், லிட்ரோ எரிவாயு நிறுவனம், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம், இலங்கை தரநிர்ணய கட்டளைகள் நிறுவனம், இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டுக்கான தராதர அங்கீகார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிசக்தி அமைச்சு மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். இது தவிரவும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ.டி.டபிள்யூ.ஜயதிலக மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர்.ஷாந்த வல்பொலகே, பெற்றோலியத்துறை நிபுணர் நிமல்.டி.சில்வா ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்ததுடன், எழுத்துமூலம் அவற்றுக்குப் பதில் வழங்குமாறும் கோரிக்கைவிடுத்தார்.
எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் வெடிப்புச் சம்பவங்கள் குறித்து அனைத்துத் தரப்பினரினதும் கருத்துக்களும் பெறப்பட்டன.
எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் ஏற்பட்ட மாற்றத்தினால் வெடிப்புக்கள் ஏற்படுகின்றனவா என்பது தொடர்பிலும், உயர் தரத்திலான கருவிகளைப் பயன்படுத்துவதன் அவசியம், எரிவாயு கசிவின் போது ஏற்படக்கூடிய நாற்றம் குறித்து பரிசீலனை செய்து அறிக்கைகளைப் பெற்று அவற்றை சந்தைக்கு விநியோகித்தல், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக் கொண்டு அதில் உள்ள பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவது, இலங்கைக்கு இறக்குமதிசெய்யப்படும் எரிவாயு நாட்டுக்குள் கொண்டுவரப்பட முன்னர் பரிசோதனைக்கு உட்படுத்தல் போன்ற விடயங்கள் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர்களான வாசுதேவ நாணயகார, உதய கம்மன்பில, நிமல் சிறிபால.டி சில்வா, மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.