ஏ.ஆர்.ரகுமானுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய இசையமைப்பாளர் விருது….
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து பெரிய நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். ரஜினியின் முத்து, சிவாஜி, எந்திரன், 2.0 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். தேசிய விருது, கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ள அவர் “ஸ்லம் டாக் மில்லியனியர்” என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்து உலக சினிமா துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருதை வென்றார்.
2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் “பத்ம பூஷன்” விருது பெற்றார். இந்த நிலையில் இன்னொரு சர்வதேச அங்கீகாரமாக எகிப்தில் நடைபெற்று வரும் 43-வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.