‘சபரிமலையில் காணிக்கையை எண்ம முறையில் செலுத்தலாம்’
சபரிமலையில் காணிக்கைத் தொகையை எண்ம (டிஜிட்டல்) முறையில் செலுத்தலாம் என்று திருவாங்கூா் தேவஸ்தான வாரியம் அறிவித்துள்ளது. இதற்காக சபரிமலையிலும், அதன் அருகே உள்ள பகுதிகளிலும் கூகுள் பே-யின் ‘கியூஆா் கோட்’கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக தேவஸ்தான வாரியத்தின் செயல் அதிகாரி வி. கிருஷ்ணகுமாா் வாரியா் மேலும் கூறுகையில், ‘சபரிமலை சந்நிதானம், கோயில் வளாகம், நிலக்கல் ஆகிய பகுதிகளில் 22-க்கும் மேற்பட்ட ‘கியூஆா் கோட்’கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி பக்தா்கள் காணிக்கைத் தொகையை கூகுள் பே மூலம் செலுத்தலாம். சபரிமலைக்கு வரும் வழியில் மேலும் பல இடங்களில் ‘கியூஆா் கோட்’கள் காட்சிப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
சந்நிதானம் அருகே கூட்டநெரிசல் ஏற்படுவதைத் தடுக்கவும், பக்தா்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும் கூடுதலாக போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பணியில் 265 அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனா். தற்போது கூடுதலாக 300 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதில், உளவுப் பிரிவு, கமாண்டோ பிரிவு, வெடிகுண்டு நிபுணா்கள், அதிரடி படையினரும் உள்ளனா். அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர பிரதேசத்தில் இருந்து பேரிடா் மீட்புப் படையினரும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா் என்று தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது.