50 ஆண்டுகளுக்கு பிறகு வந்த வைகை ஆற்று தண்ணீர்: விவசாயிகள் மகிழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை ஆற்று தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரம், முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 435 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வைகை தண்ணீர் குண்டாறு பகுதிகளுக்கு வந்தது கிடையாது. மழையை நம்பி தான் விவசாயிகள் ஒரு போகம் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் உள்ள கால்வாய்கள் பராமரிக்கப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் வரத்து கால்வாய்களின் தண்ணீர் கண்மாய்களுக்கு செல்ல முடியாத நிலை 50 ஆண்டு காலமாக நீடித்து வந்தது.

இந்நிலையில் மழைக் காலத்திற்கு முன்பாக அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் வரத்துக் கால்வாய் பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து, கால்வாய்களை மழை காலத்திற்கு முன்பாகவே தூர்வார அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் நிலையில் , ஏற்கனவே அமைச்சர் ராஜகண்ணப்பன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பார்த்திபனூர் மதகு அணை வழியாக ஆற்றுக்கு தண்ணீர் வந்து அங்குள்ள கிராமங்களில் உள்ள கண்மாய்களில், வரத்து கால்வாய்கள் மூலம் முழு அளவில் தண்ணீர் நிரம்பி வருகிறது.

50 ஆண்டுகளுக்கு பிறகு வைகை ஆற்று தண்ணீர் வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் வரும் காலங்களில் தடுப்பணைகளை கட்டி நீரை சேமித்து, குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் போக்குவரத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.