ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு கலை.
ஊடகவியலாளர்களால் கூட புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்த நாட்டை கையாளுவதற்கு பல்வேறு சக்திகள் செயற்படுகின்றன பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ
•ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு கலை.
•நாம் ஒருபோதும் ஊடகங்களிடம் எதனையும் மறைக்கவில்லை.
•எமது வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளில் ஊடகவியலாளர்கள் எம்முடன் இருந்தனர்.
•நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊடகவியலாளர்களை பாதுகாத்தோம்.
ஊடகவியலாளர்களால் கூட புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்த நாட்டை கையாளுவதற்கு பல்வேறு சக்திகள் செயற்படுகின்றன என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.
வெகுசன ஊடக அமைச்சினால் இலங்கையில் முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு ‘அசிதிசி காப்புறுதி’ வழங்கும் செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு அலரி மாளிகையில் இன்று (02) இடம்பெற்றது. குறித்தத நிகழ்வில் உரையாற்றும் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்று ஊடகங்களில் காட்டப்படுவதை பயன்படுத்தி இந்நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் எனவும் கௌரவ பிரதமர் சுட்டிக்காட்டினார்.
‘ஊடகங்களால் அரசாங்கம் அமைக்க முடியும். ஒரு அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முடியும். ஆனால் ஊடகங்களால் அரசாங்கங்களை பாதுகாக்க முடியாது. அரசை நடத்துபவர்களால்தான் அரசை பாதுகாக்க முடியும்.
ஊடகங்கள் அரசாங்கத்தைப் பாதுகாக்கப் போகிறது என்றால், ஊடகங்களுக்கு இதனைவிட அதிக காப்புறுதி வழங்கப்பட வேண்டும், ‘என்று தெரிவித்த கௌரவ பிரதமர், ‘இதனை ஊடகவியலாளர்கள் புரிந்துக் கொண்டதற்கு எம்மவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்’ எனக் குறிப்பிட்டார்.
காப்புறுதி பயனாளர்களான ஐந்து ஊடகவியலாளர்களுக்கு கௌரவ பிரதமரினால் காப்புறுதி பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட அமைச்சர்களும் காப்புறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.
அசிதிசி காப்புறுதி ஊடாக சுமார் 3000 ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி பெற்றுக்கொடுக்க இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வின் போது பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
இந்நாட்டின் ஊடகவியலாளர்களுக்கு அசிதிசி காப்புறுதி வழங்கப்படும் நாள் இன்றாகும். அசிதிசி காப்புறுதி போன்றதொன்றை கொடுக்க ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை. சரியான நபருக்கு நாங்கள் சரியானதை வழங்கியிருப்பதால், இன்று உங்களுக்கு ஊடக அசிதிசி காப்புறுதி உங்களுக்கு கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன். டளஸிடம் ஊடகத்தை பொறுப்பேற்குமாறு சில காலத்திற்கு முன்பு நாம் கூறினோம். ஊடகவியலாளர்களும், நாடும் கோரியது. நாம் வழங்கிய போதே ஏற்றுக்கொண்டிருந்தால் இந்தக் காப்புறுதி இதற்கு முன்பே கிடைத்திருக்கும் என்றுதான் கூற வேண்டும். சரியான நபருக்கு நாங்கள் சரியானதை வழங்கியுள்ளோம் என்பதை நீங்கள் இப்போது விளங்கிக் கொள்ளலாம்.
தொழில் ரீதியான சட்டத்தரணிகளுக்கு அடுத்தபடியாக நான் ஊடகவியலாளர்களுடனேயே நெருக்கமாக இருந்தேன்.
முன்பு பாராளுமன்றக் குழுக் கூட்டமொன்றுக்கு நான் வரும்போது, அதோ நிருபர் வருகிறார் என ஜனாதிபதி கூறியது நினைவிருக்கிறது. நான் நிருபர் அல்ல. ஆசிரியர் என்று கூறினேன். நான் திருத்தம் மேற்கொண்டே பத்திரிகைகளுக்கு தகவல் வழங்கினேன். கட்சிக்கும் எனக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில். அதனாலேயே நான் ஆசிரியர் என்று சொன்னேன்.
ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் காணப்பட்ட போதெல்லாம் நாங்கள் ஊடகவியலாளர்களைப் பாதுகாத்தோம். அரசியல் குண்டர்கள் தாக்கி, ஊடகவியலாளர்களின் கெமரா கருவிகளை உடைத்த போது, நாம் அவற்றை ஊடகவியலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தோம். 88ஃ89களில் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் ரிச்சர்ட் டி சொய்சா தெற்கிற்கு வந்து எங்களுடன் தெற்கில் பணியாற்றினார்.
ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு கலை. ஊடகங்களுக்கு நாம் பலமாக இருந்தால் ஊடகங்கள் நம்மை பலப்படுத்தும். நாங்கள் ஒருபோதும் ஊடகங்களிடம் எதையும் மறைக்கவில்லை.
ஊடகங்களிடம் இருந்து எதையாவது மறைத்தால், அது மீதான ஆர்வம் நாட்டு மக்களுக்கு அதிகரிக்கும். மறைக்க மறைக்க அதனூடாக உருவாகும் பொய்கள் அதிகம். இன்று பாராளுமன்ற விவாதங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன. ஆனால் யாரும் அவற்றை பார்ப்பதில்லை. இன்று அமைச்சரவைக்கு மாத்திரமே ஊடகவியலாளர்கள் செல்வதில்லை. அதனால்தான் அமைச்சரவையில் நடந்தவை என்று விசித்திரக் கதைகள் கூறப்படுகின்றன. அதுதான் ஊடகங்களின் மாதிரி.
எங்கள் வாழ்க்கையின் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் ஊடகவியலாளர்கள் எம்முடன் இருந்தனர். எங்களை ஆட்சிக்கு கொண்டு வர ஊடகவியலாளர்கள் பெரும் சேவை செய்தனர். ஆனால் இப்போது ஊடகங்கள் எங்களுடன் இல்லை என்று குற்றம் சாட்டுகிறோம். இது விசித்திரமானதல்ல. நம் வாழ்நாளில் நாம் அனுபவித்த ஒன்று. ஊடகங்களால் அரசாங்கம் அமைக்க முடியும். ஒரு அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முடியும். ஆனால் ஊடகங்களால் அரசாங்கங்களை பாதுகாக்க முடியாது. அரசை நடத்துபவர்களால்தான் அரசை பாதுகாக்க முடியும். அரசாங்கத்தை காக்க ஊடகங்கள் சென்றால் ஊடகங்களுக்கு அதிக காப்புறுதி வழங்க வேண்டும். இதனை ஊடகவியலாளர்கள் புரிந்துக் கொண்டதற்கு, எமது மக்கள் புரிந்துக் கொள்ளவில்லை.
அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் அரச ஊடகங்களில் வெளியிடப்படுவதில்லை என்பது ஊடகங்கள் மீது அன்றாடம் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று. நாட்டில் இடம்பெறும் நல்ல விடயங்கள் பத்திரிகைகளில் வெளிவருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எப்போதும் இருந்து வந்தது. எங்களுக்கு மட்டுமல்ல அநாகரிக தர்மபாலவுக்கும் அந்தப் பிரச்சினை இருந்தது. ‘நாட்டில் எவ்வளவு நல்ல விடயங்கள் நடைபெற்றாலும், அவை பத்திரிகைகளில் வெளியிடப்படுவதில்லை என அவர் ஒருமுறை கூறினார். பத்திரிக்கையாளர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை. அன்றிலிருந்து இன்று வரை ஊடகங்கள் அப்படித்தான்.
மக்களும் அப்படித்தான். தொலைக்காட்சி செய்திகளில் அபிவிருத்தி செய்தி என்று தலைப்புச் செய்தி வந்தவுடன், பார்வையாளர்கள் நாடகத்தைப் பார்க்க வேறு செனலுக்கு மாறுகிறார்கள். ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களுக்கு இது புரிகின்றது. நமக்குப் புரியாததுதான் பிரச்சனை.
இவற்றை சாதாரண விடயங்களாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஊடகங்களால் இன்று நாம் மட்டுமல்ல உலகமே கலக்கமடைந்துள்ளது.
கெரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் சமூக வலைதளங்களில் வந்த விடயங்கள் எனக்கு நினைவிருக்கிறது. இது ஒரு நாட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் என்று கூறப்பட்டது. சமூக ஊடகங்களில் இந்த பிரசாரம் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறியது, மிகவும் சக்திவாய்ந்த நாடுகள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுகின்றன. அதன்பிறகு, கொரோனா வைரஸுக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி குறித்து அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.
நம் நாட்டில் மட்டுமல்ல அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் இளைஞர்கள் ஊசி ஏற்றிக்கொள்ள முன்வரவில்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்களால் உலகம் எதிர்கொண்ட விடயங்கள் அவை. இறுதியாக, உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் தொற்றுநோயை விட தகவல் தொற்றுநோய் மோசமானது என்று கூறினார்கள்.
அவர்கள் அதனை இன்ட்ரோ டெமிக் (Intro Demic) என்று அழைத்தனர். இந்த தொற்றுநோயால் உலகம் மூழ்கியிருப்பதை அவர்களும் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த இன்ட்ரோ டெமிக் நம் நாட்டிற்கும் வந்தது. நாங்கள் கொரோனா தடுப்பூசி போட முயற்சித்தபோது, சரியான நேரத்தில் தடுப்பூசி போடாதது எங்கள் தவறு என்று கூறினர். தடுப்பூசி கிடைத்தபோது, ஃபைசரை இறக்குமதி செய்ய முடிந்த நிலையில், மலிவான சீன தடுப்பூசியை இறக்குமதி செய்துள்ளோம் என்று கூறினர். சீன தடுப்பூசி பயனற்றது என்று சொன்னார்கள். சிலர் மொடர்னா நல்லது எனவே அதையே கொண்டு வாருங்கள் என்றார்கள். இவ்வாறு நாட்டு மக்களின் வாழ்க்கையோடு விளையாடினர்.
அதன் பின்னர் ஒவ்வொரு வீட்டிலும் கொரோனா மரணங்கள் இடம்பெறுவதாக அச்சத்தை ஏற்படுத்தினர். மருத்துவர்கள் கூறியதை விட பலி எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இறுதியாக நாடு மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதுதான் தீர்வு. நாடு மூடப்படாவிட்டால் தானாக பூட்டப்படும் என்றார்கள். நாட்டை மூடிவிட்டு ஆடைத் தொழிற்சாலைகளைத் திறந்தோம். அதனை மூடவில்லை என்றால் ஆடை தொழிற்சாலை கொத்தணி உருவாகும் என்றனர். நாட்டை மூடக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் பேரணி நடத்தினர். அந்த மாபெரும் பொருளாதாரத்தை அழித்துவிட்டு இப்போது நாடு திவாலாகி விட்டது என்கிறார்கள். இதுதான் தகவல் வெளிப்படுத்தப்பட்ட விதம்.
ஊடகங்களுக்கு இவற்றைக் சுட்டிகாட்டாமல் இருக்க முடியாது. ஆனால், ஊடகங்களுக்கு தெரியாமல் ஊடகங்களின் மூலம் பயன் பெறுவதற்கும் நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு முடிந்துள்ளது. இவற்றை நாட்டை நேசிக்கும், பொறுப்புள்ள ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்நாட்டு ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விடயமும் உள்ளது. ஊடகவியலாளர்கள் கூட புரிந்து கொள்ளாத வகையில் இந்த நாட்டை கையாளுவதற்கு பல்வேறு சக்திகள் செயற்படுகின்றன. போருக்குப் பின்னர் எங்களுக்கு அந்த அனுபவம் உண்டு. இன்று ஊடகங்களில் காட்டப்படுவதைப் பயன்படுத்தி இந்த நாட்டின் நற்பெயரை கலங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர்.
போரில் உயிரிழந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் சர்வதேச அளவில் அப்பாவி தமிழர்களாக சித்தரிக்கப்பட்டனர். போர் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அவர்கள் அந்த விடயங்களைப் பயன்படுத்தினர்.
கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் இந்த நாட்டில் உள்ள தூதரகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் தான் கடத்தப்பட்டதாக ஒரு பாரிய சம்பவம் நிகழ்த்தப்பட்டமை உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர் பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. அவர் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் இது நடந்தமையால், இந்த நாட்டில் உள்ள அனைத்து தூதரகங்களும் மிகவும் கலக்கமடைந்தன. சில நாடுகள் அவருடைய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவித்தன. உலகிற்கு நாம் பதில் சொல்ல வேண்டிய நிலையை உருவாக்கியது.
ஆனால் நாட்டின் நல்ல நேரத்திற்கு, அந்த பெண் அன்று வந்து சென்ற அனைத்து இடங்களிலும் சிசிடிவி கெமராக்கள் இருந்தன. சி.ஐ.டி (சிஐடி) பாரபட்சமின்றி விசாரித்தது. இறுதியாக, இது ஒரு புரளி என்பதை உலகிற்கு நிரூபிக்க முடிந்தது. ஆனால் அது பொய் என்று நிரூபணமானபோது எங்கள் மீது குற்றம் சாட்டியவர்கள் வருத்தம் கூட அடையவில்லை.
இவற்றிலிருந்து நாம் எதனை புரிந்து கொள்ள வேண்டும்? இந்நாட்டு மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பறிக்க மிக நுட்பமாகச் செயற்படும் சக்திகள் ஊடகங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
பிரபலமான முடிவுகளை எடுப்பதற்கு மாறாக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டத்திலேயே நமது அரசாங்கம் இப்போது நுழைந்து கொண்டிருக்கிறது. அந்த கடினமான முடிவுகளை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அரசியல் எதிர்காலத்தை அடகு வைத்தே நாட்டின் சார்பில் அந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படும் போது இந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் நாட்டின் சார்பாக பொறுப்புடன் செயற்படும் என நம்புகின்றோம்.
உங்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இதுபோன்ற திட்டங்களை செயற்படுத்துகிறோம். உங்கள் எதிர்காலத்தை நாங்கள் பாதுகாக்கும் போது, நாட்டின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு ஊடகவியலாளர்களாகிய நீங்கள், அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என்று நம்புகிறோம் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.
கௌரவ வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும,
கௌரவ பிரதமர் அவர்களே, ஒரு கொள்கை வகுப்பாளரை விட அதிக எடையைச் சுமக்கும் ஒரு மாற்று ஊடகவியலாளர் என்ற இந்த வாய்ப்பை நான் இன்று காண்கிறேன்.
மாற்றுப் பத்திரிக்கையாளர்களான எங்களிடம் திகதியிடப்படாத மரண உத்தரவாதமும், பேனையும் மட்டுமே இருந்தன.
நூறாயிரக்கணக்கான வாசகர்களே அன்று எங்களுக்கு உயிர் பாதுகாப்பையும் ஆயுள் காப்புறுதியையும் வழங்கினர். அந்த பேனையை எடுத்த எங்கள் தொழில்முறை சகாக்கள். அந்த இரண்டைத் தவிர நான்கு அரசியல் தலைவர்கள் பெரும் சுவராக அந்த இருண்ட நிழல்கள் நாளிதழ்களின் பக்கங்களில் விழுந்த காலக்கட்டத்தில் எங்கள் பாதுகாப்பிற்காக எழுந்து நின்றார்கள்.
அப்போது, சுனில் மாதவ தலைமையிலான ஒரு பத்திரிகை, சுனந்த தேசப்பிரிய தலைமையிலான மற்றொரு மாற்றுப் பத்திரிகை அரசாங்கத்தின் மொத்தக் கொள்கைக்கு சவால் விட்டபோது, கௌரவ பிரதமர் அவர்களே, நீங்களும் இன்னும் மூன்று பேரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் எம்மை பற்றி ஆராய்ந்து, எமக்கு அன்பையும் ஆதரவையும் அளித்தீர்கள்.
அரசின் பொறுப்பை நிறைவேற்றி இன்று இந்த நாட்டிலுள்ள தொழில்முறை ஊடகவியலாளர்களுக்கு அசிதிசி காப்புறுதி வழங்கும் இவ்வேளையில் உங்களுக்கு கௌரவமளிப்பதுடன், ஊடகத்துறையுடன் தொடர்புடைய ஒரு நபராக இதனை வெளிப்படுத்துவதற்கு இன்று முதல்முறையாக அரங்கு கிடைத்துள்ளது.
ஏனைய மூவரையும் நான் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். துரதிர்ஷ்டவசமாக, மூவரும் இப்போது உயிருடன் இல்லை. ஒருவர் மங்கள சமரவீர. மற்றவர் காமினி திசாநாயக்க மற்றவர் லலித் அத்துலத்முதலி. மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர, எதிர்கட்சியின் போராளியும் துணிச்சலும் மிக்க அரசியல்வாதியான இந்த மூன்று அரசியல்வாதிகளும் அப்போது எமக்கான ஆயுள் காப்புறுதிக்காக முன்நின்றார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீர, ஊடக நிறுவன உரிமையாளர்கள், ஊடக பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.