அப்பாவி மக்களைப் படுகுழிக்குள் தள்ளியுள்ள அரசு இனி எதற்கு?
“இந்த அரசு தங்களது நண்பர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காக அப்பாவி மக்களைப் படுகுழிக்குள் தள்ளியுள்ளது. இந்த அரசு இனி எதற்கு?”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அணிந்திருக்கும் ஆடைகளை போன்ற ஆடைகளை அணிந்தவாறே வீடுகளில் இன்று பெண்களும் தாய்மார்களும் சமையல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான ஒரு நிலைமை நாட்டுக்கு ஏற்படும் என்று நாம் கனவில்கூட நினைத்ததில்லை.
நாட்டு மக்களின் உடல்களில் ஈக்கள்கூட மொய்க்காத அளவு நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பார் என்ற மக்கள் அதிகம் நம்பிக்கை கொண்ட ஒரு தலைவரே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச.
இன்று அவரது இயலாமையும் வெளிப்படுகின்றது. அவர் பெயிலடைந்துள்ளார்.
நாட்டில் தற்போது எழுந்துள்ள உரப்பிரச்சினை தொடர்பில், நாட்டு மக்கள் மிகத் தெளிவாகக் கூறினர்.
காபனிக் உர விவசாய முறைமை சிறந்தது. எனினும், அது ஒரு முறைமையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறினர்.
எனினும், மக்களின் கருத்துக்கு இந்த அரசு செவிசாய்க்கவில்லை.
இதன் காரணமாக மரக்கறிகளின் விலை வானளவு உயர்ந்தது. அரிசியின் விலையும் அதிகரித்தது; குறைந்தபாடில்லை. ஏனைய சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இவை அனைத்தையும் தெரிந்துகொண்டே அரசு இதனைச் செய்தது.
இறுதியில் அரசு என்ன செய்துள்ளது? இரசாயன உரத்தை மீள இறக்குமதி செய்வதற்காகக் கறுப்புச் சந்தைகாரர்களிடம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பதிலாக ராஜபக்சர்கள் எனும் தொற்றுக்களை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து சமூகத்தில் தற்போது அதிகமாகப் பரவி வருகின்றது என்று நான் நினைக்கின்றேன்” – என்றார்.