மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
“மாற்றுத்திறனாளி நபர்களின் தலைமைத்துவம் மற்றும் பங்கேற்பு உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் நிலையான கோவிட் – 19 இற்குப் பிந்தைய உலகம்.” எனும் தொனிப்பொருளிற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கான
மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வானது இன்று (03) மட்டக்களப்பு தன்னாமுனை மியானி மண்டபத்தில் இடம்பெற்றது.
சமூக சேவை திணைக்களம், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை அலுவலகம் மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியேகத்தர் எஸ்.அருண்மொழி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய கே.கருணாகரன் கலந்துகொண்டிருந்ததுடன், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மதிவண்ணன் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.மேனகா உள்ளிட்ட திணைக்களம்சார் உயரதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றப்பட்டதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளியின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகியதுடன், மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் உறுப்பினர்களினால் கண்கவர் நடனம் மற்றும் பாடல் என்பனை மேடையினை அலங்கரித்திருந்தது.
இதன்போது பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களிற்கும், பிரதேச மட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களிற்கும் அன்பளிப்பு பரிசில்கள் வழங்கி பென்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தினால் அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கியதனைத்தொடர்ந்து அதிதிகளின் விசேட உரைகளும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் சார்பாக மாவட்டத்தில் இயங்கிவரும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாகாண சமூக சேவை திணைக்களத்தின் அதிகாரிகள், மாவட்ட சமூக சேவை திணைக்கள அதிகாரிகள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், சமூக சேவை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.
1992 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளிற்கு அமைய டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.