சமூக மட்ட அமைப்புக்களினூடாக பெண்சாரணியத்தை ஆரம்பிக்கும் செயற்திட்டம்!
இந்து கலாச்சார அமைச்சின் ஒத்துழைப்புடன் வடமாகாணத்தில் முதன் முறையாக சமூக மட்ட அமைப்புகளினூடாக பெண்சாரணியத்தை ஆரம்பிக்கும் செயற்திட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சமூக சாரணிய தலைவர் பயிற்சி கடந்த வாரம் இலங்கை செஞ்சிலுவைச்சங்க முல்லைத்தீவுக் கிளையில் நடைபெற்றது.
மூன்று நாட்களை கொண்ட குறித்த பயிற்சி நெறியானது தேசிய சமூக சாரணிய ஆலோசகர் இலங்கைப் பெண் சாரணியர் சங்கம் பிரியந்தி ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலின் கீழ் வளவாளர்களான இனோக்கா, பெலினி திருக்குமாரன், கோபிகா புவனேஸ்வரன் ஆகியோரால் நடாத்தப்பட்டது.
குறித்த வதிவிட பயிற்சி நெறியில் அறநெறிப்பாடசாலைகள் மற்றும் மறைக்கல்வியைச்சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இச்சமூக சாரணிய தலைவர் பயிற்சியின் போது சாரணிய கற்கைநெறி மட்டுமல்லாது தலைமைத்துவ திறன்கள், வாழக்கைத்திறன்கள், சுற்றாடல் பாதுகாப்பு, முதலுதவி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கற்பிக்கப்பட்டன.
மேலும் இவ் வதிவிடப்பயிற்சிக்காலத்தில் தொண்டர் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட ஆக்கங்கள்
இறுதி நாளன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை முல்லைத்தீவு மாவட்ட தலைமைக் காரியாலய பொலிஸ் பரிசோதகர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
பங்கு பற்றிய ஆசிரியர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் : இது மிகவும் பயனுடைய பயிற்சிநெறியாக அமைந்ததாக தெரிவித்துள்ளனர்.