கர்நாடகம்: தெ.ஆப்பிரிக்காலிருந்து வந்த பயணிகள் அனைவருக்கும் ஒமைக்ரான் பரிசோதனை
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கர்நாடகம் வந்த பயணிகளைக் கண்டுபிடித்து அவர்கள் அனைவருக்கும் ஒமைக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் நேற்று(டிச.2) தென் ஆப்பிரிக்காவிலிருந்து கர்நாடகம் வந்த இரண்டு பயணிகளுக்கு புதிய வகை கரோனாவான ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து இன்று கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது.
இக்கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா, ‘ சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கர்நாடகம் வந்த பயணிகளைக் கண்டறிந்து அவர்கள் அனைவருக்கும் ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற இருந்த அனைத்து அரசு விழாக்களும் ரத்து செய்யப்படுகிறது’ என்றும் தெரிவித்தார்.
மேலும் திருமணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் 500 பேர்க்கு மேல் கலந்துகொள்ள அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்தார்.