இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் விஜய் சேதுபதி படத்திற்கு தடை.
இசைஞானி இளையராஜா கொடுத்த புகாரால் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும், காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் திரை உலகின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் மணிகண்டன்.
அந்த படத்தை தொடர்ந்து இவர் ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை போன்ற பல நல்ல படங்களை தந்திருக்கிறார். தற்போது இவர் ‘கடைசி விவசாயி’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நல்லாண்டி எனும் முதியவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும், விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் மணிகண்டன் இருவரும் சேர்ந்து படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு முடிந்து கொரோனா காரணமாக நீண்ட நாள் முடங்கி கிடந்தால் தற்போது கடைசி விவசாயி படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் இளையராஜாவின் புகார் பட ரிலீசுக்கு சிக்கலாக மாறி இருக்கிறது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின் இளையராஜா பின்னணி இசையெல்லாம் முடித்து தந்தார். ஆனால், அதில் மணிகண்டனுக்கு திருப்தி இல்லை. அதனால் இளையராஜாவிடம் சில மாறுதல்கள் செய்ய சொல்லி கேட்டார். அதற்கு இளையராஜா செய்து தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இயக்குனர் மணிகண்டன் பின்னணி இசையை சந்தோஷ் நாராயணனை வைத்து செய்து முடித்தார். மேலும், கடந்த மாதம் தான் இந்த படத்தின் டிரைலர் எல்லாம் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் தான் படத்திலிருந்து தன்னுடைய இசை மாற்றப்பட்டிருப்பது இளையராஜாவுக்கு தெரிய வந்து இருக்கிறது. இந்த நிலையில் தனக்கு தெரியாமல் தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்த மாற்றம் செய்தது தவறு என்று இசையமைப்பாளர் சங்கத்தில் கடைசி விவசாயி படக்குழு மீது இளையராஜா புகார் அளித்துள்ளார். இதனால் இந்த ஆண்டு டிசம்பரில் திரைக்கு வர இருந்த இப்படம் இளையராஜாவின் புகாரால் சிக்கலுக்கு உள்ளாகிறது. மேலும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.