பாகிஸ்தானில் பரபரப்பு இலங்கையை சேர்ந்தவர் அடித்துக்கொலை: இம்ரான்கான் கண்டனம்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இலங்கையை சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து, பிரியந்தா குமாராவை சாலைக்கு இழுத்து வந்து சரமாரியாக அடித்து, உதைத்தனர். மேலும் அவரை கடுமையாக சித்ரவதை செய்தனர்.
இதில் பிரியந்தா குமாரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் பிரியந்தா குமாராவை தீவைத்து எரித்தனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவானதை தொடர்ந்து, நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் கூட்டத்தினரை அடித்து விரட்டி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் இந்த படுகொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி உஸ்மான் புஸ்தார், இந்த கொடூர செயலில் தொடர்புடைய ஒவ்வொருவரும் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறுகையில், “பயங்கரமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது” இது குறித்த விசாரணையை தனிப்பட்ட முறையில் விசாரிக்கப்படும், இந்த நாள் “பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள்” என்றும் அவர் கூறினார்.