வாட்ஸ்அப்பில் ஆபாச செய்தி.. பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – ஆசிரியர் கைது

அரசு பள்ளி பெண் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கோவை மாணவி தற்கொலைக்கு பிறகு ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக நிறைய புகார்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கரூரை சேர்ந்த மாணவி பாலியல் தொல்லைக்கு பலியாகும் கடைசி பெண் நானாக இருக்கட்டும் என கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியைக்கு உடன் பணியாற்றும் சக ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரமக்குடியில் நடந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.இ ந்த பள்ளியில் சத்திரக்குடி, போகலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வரலாறு பாடங்கள் நடத்திவருபவர் ஆசிரியை மலர்விழி. இவருக்கு அதே பள்ளியில் பணியாற்றும் நாகாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சந்திரன்( வயது 52) என்பவர் செல்போன் மூலம் வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பி பாலியல் உறவுக்கு அடிக்கடி அழைத்து சீண்டலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆசிரியை மலர்விழி நடந்த சம்பவத்தை அவரது கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் சந்திரன் மீது மலர்விழியின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்திரக்குடி காவல் அதிகாரி நாகராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. பெண்ணை மானபங்கம் படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பாலியல் சீண்டல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குபதிந்து சந்திரனை கைது செய்து பரமக்குடி ஒருகிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.