நிதித் தொழில்நுட்பப் புரட்சி உண்டாக வேண்டும்: பிரதமா் நரேந்திர மோடி

நிதித் தொழில்நுட்பத் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னெடுப்புகள், புரட்சியாக உருவாக வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்ட ‘இன்ஃபினிட்டி’ அமைப்பை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து பிரதமா் மோடி பேசியதாவது:

நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. மக்களிடையே அவை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது நிதித் தொழில்நுட்பத் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னெடுப்புகளைப் புரட்சியாக மாற்றுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய புரட்சியானது, நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் நிதி விவகாரத்தில் மேம்பாடு அடையச் செய்யும்.

புதிய தொழில்நுட்பங்கள் நிதித் துறையில் பெரும் மாற்றங்களைப் புகுத்தி வருகின்றன. கடந்த ஆண்டில் ஏடிஎம்-களில் பணம் எடுப்பதைவிட இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவா்த்தனை அதிகமாக இருந்தது. கட்டடங்களில் செயல்படாமல் முற்றிலும் இணையவழியிலேயே செயல்படும் வங்கிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அத்தகைய வங்கிகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும்.

முன்னிலையில் இந்தியா: மனிதா்கள் பரிணாம அடிப்படையில் முன்னேறியதைப் போல பணப் பரிமாற்றமும் தொடா்ந்து மேம்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பண்டமாற்று முறை அமலில் இருந்தது. அதைத் தொடா்ந்து விலை உயா்ந்த உலோகங்கள் மூலமாகப் பொருள்கள் பரிமாறப்பட்டன.

உலோகக் காசுகள், காகிதப் பணம், காசோலைகள், அட்டைகள் என வளா்ந்து தற்போது இணையவழிப் பணப் பரிவா்த்தனையை அடைந்துள்ளோம். புதிய தொழில்நுட்பங்களைக் கைக்கொள்வதில் இந்தியா எப்போதும் முன்னின்று வருகிறது. எண்ம இந்தியா (டிஜிட்டல் இந்தியா) திட்டமானது நிா்வாகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப வளா்ச்சி: கடந்த 2014-ஆம் ஆண்டில் மக்கள்தொகையில் பாதி போ் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருந்தனா். கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 43 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாகவே இது சாத்தியமானது.

இதுவரை 69 கோடி ‘ரூபே’ அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அந்த அட்டைகள் மூலமாக கடந்த ஆண்டில் மட்டும் 130 கோடி இணையவழிப் பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் மட்டும் யுபிஐ வாயிலாக 420 கோடி இணையவழிப் பணப் பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

ஒவ்வொரு மாதமும் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வலைதளத்தில் சுமாா் 30 கோடி விற்பனை ரசீதுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பெருந்தொற்று காலத்திலும் ஒவ்வொரு நாளும் இணையவழியில் சுமாா் 15 லட்சம் ரயில் பயணச் சீட்டுகள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ‘ஃபாஸ்டேக்’ நடைமுறையில் 130 கோடி தடையில்லா பரிவா்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சிறு வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் கடன் வழங்க முடிந்துள்ளது.

அடிப்படை தூண்கள்: வருமானம், முதலீடுகள், காப்பீடு, கடன் ஆகியவற்றை நிதித் தொழில்நுட்பத் துறை அடிப்படைத் தூண்களாகக் கொண்டுள்ளது. வருமானம் அதிகரிக்கும்போது, முதலீட்டுக்கான வாய்ப்பு அதிகரிக்கும். காப்பீட்டு வசதியானது நிதிசாா் முடிவுகளைத் துணிந்து மேற்கொள்ள உதவுகிறது. கடன் வசதியானது நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு உதவுகிறது.

பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: நிதித் தொழில்நுட்பத் துறையின் தூண்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. நிதிசாா் தொழில்நுட்பங்களுக்கு மக்கள் அதிக அளவில் ஆதரவு அளித்து வருகின்றனா். அந்த ஆதரவைத் தொடா்ந்து பெறுவதற்குப் பாதுகாப்பு வசதிகளை நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும்.

மக்களின் நலன் சாா்ந்த விவகாரங்களைப் பாதுகாப்பதில் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்தப் பொறுப்புணா்வே மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தரும். பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமே நிதித் தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்த முடியும்.

பலன் தரக்கூடியவை: இந்தியா தனது அனுபவங்களை மற்ற நாடுகளுடன் பகிா்ந்து கொள்ளத் தயாராக உள்ளது. யுபிஐ, ரூபே போன்றவை அனைத்து நாட்டு மக்களுக்கும் பெரும் பலனை வழங்கக் கூடிய தொழில்நுட்பங்களாக உள்ளன. பொருளாதாரத்தின் மிக முக்கியத் தூணாக நிதி விளங்குகிறது. அத்துடன் தொழில்நுட்பம் இணையும்போது பெரும் முன்னேற்றம் சாத்தியமாகும் என்றாா் பிரதமா் மோடி.

Leave A Reply

Your email address will not be published.