இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸூடன் சந்திப்பு….

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மிசுகோஷி ஹிடேகி வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸை 2021 நவம்பர் 30 ஆந் திகதி மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
புதிய ஜப்பானியத் தூதுவரை அன்புடன் வரவேற்ற வெளிநாட்டு அமைச்சர், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்தார். 1951ஆம் ஆண்டிலிருந்து கொழும்புத் திட்டத்தின் கீழ் பல துறைகளில் ஜப்பான் இலங்கைக்கு விரிவான உதவிகளையும் பயிற்சி வாய்ப்புக்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருவதாக வெளிநாட்டு அமைச்சர் சுட்டிக்காட்டினார். சென் பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டில் இலங்கையின் அப்போதைய நிதியமைச்சர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைத் தொடர்ந்து, ஜப்பான் அரசாங்கமும் அதன் மக்களும் இலங்கைக்கு ஒற்றுமையின் அடையாளமாக பெரிதும் உதவியுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய குறிப்பிடத்தக்க பரிசுகளில் ஒன்றாகும்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், களனி ஆற்றின் மீது புதிய பாலத்தை நிர்மாணிப்பதற்கான திட்டம் மற்றும் அனுராதபுர நீர் வழங்கல் திட்டம், கண்டி நகர கழிவு நீர் முகாமைத்துவத் திட்டம் போன்ற ஜப்பானிய நிதியில் இலங்கையில் அண்மைக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக வெளிநாட்டு அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், ஜப்பானிய உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புவிசார்ந்த தொலைக்காட்சி ஒளிபரப்புத் திட்டத்தை டிஜிட்டல் மயமாக்குவதானது பெரும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் என வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை மக்களின் உண்மையான தேவைகளை ஜப்பான் அரசாங்கம் எப்போதும் நிவர்த்தி செய்து வருகின்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக தாம் கடமையாற்றிய காலத்தில், இலங்கையின் இளைஞர்கள் தமது தகவல் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கு பெறுமதியானதொரு வாய்ப்பை வழங்கிய கொழும்பு பல்கலைக்கழகத்திற்கான கணினி தொழில்நுட்ப நிறுவகத்தை நிறுவுவதற்கு வளங்களை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியமையை வெளிநாட்டு அமைச்சர் நினைவு கூர்ந்தார். ஜப்பானிய மொழி நாட்டின் இளைய தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமான வெளிநாட்டு மொழிகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்ட வெளிநாட்டு அமைச்சர், எமது இளைஞர்களிடையே தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜப்பானிய மொழித் திறன் ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் நல்கிய பங்களிப்பைப் பாராட்டினார்.
இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் திரு. யசுஷி அகாஷி இலங்கையின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார்.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சரின் வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர், இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஜப்பான் அரசாங்கத்தின் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.
மேலும், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா 2022ஆம் ஆண்டு கொண்டாடப்படும் என்றும், ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ஜப்பான் அரசாங்கம் பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70ஆவது ஆண்டு நிறைவின் போது ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு தூதுவர் அழைப்பு விடுத்தார்.