யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்….
யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் (02) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வாரி சௌபாக்கியா வேலைத்திட்ட செயற்பாடுகள், குளங்கள் வாய்க்கால்கள் புனரமைப்பு கோரிக்கைகள், விவசாய செய்கைக்கான உரமானிய வழங்கல் நடவடிக்கைகள், களஞ்சிய வசதிகள், விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்ட நடவடிக்கைகள், உருளைக்கிழங்கு மானியசெயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
இங்கு விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதுடன், குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், இவ்வருடம் விவசாய நடவடிக்கைகள் பல சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது .
அந்தவகையில் அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட மானிய உதவித் திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் எமது நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாய நடவடிக்கைகள் அண்மையில் ஏற்பட்ட தொடர்ச்சியான மழை அனர்த்தம் காரணமாக பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ள இத்தருணத்திலும் விவசாய செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் விவசாயிகளுக்கு மாவட்ட செயலகம் சார்பாக தமது நன்றிகளை தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் விவசாய செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க ஆலோசனை வழங்கினார்.
மேலும், பிரதேச மற்றும் கிராம மட்ட விவசாய குழு கூட்டத்தில் வங்கிகளால் வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தேசிய ரீதியாக உள்ள உரப்பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அதிகளவில் விவசாய செய்கையில் இரசாயனப் பதார்த்தங்களை பயன்படுத்துவதால் உணவில் நஞ்சுத் தன்மை அதிகரித்து நாளடைவில் தொற்று நோய்களுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்கள் அதிகரிப்பதாக தெரிவித்தார். எனவே உடல் உள சமூக ஆரோக்கியத்தை முன்நிறுத்தி விவசாயிகள் சேதனப் பசளை பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட திட்டமிட்டல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் உதவிப்பிரதேச செயலாளர்கள், கமலநல திணைக்கள உதவி ஆணையாளர், மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், வங்கி துறைசார் தரப்பினர் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் தரப்பினர் கலந்து கொண்டனர்.