தமிழ் முற்போக்குக் கூட்டணியானது மின்சூளாக இனி ஒளியைப் பாய்ச்சும்!
“தமிழ் முற்போக்குக் கூட்டணியானது மின்சூளாக இனி ஒளியைப் பாய்ச்சும். உங்களைச் சூழ்ந்துள்ள இருளையும் அகற்றும். மூன்று கட்சிகளும் புரிந்துணர்வுடன் பயணத்தால் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கடந்த வருடம் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 300 மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“ஒமிக்ரோன் என்ற புதிய வைரஸ் பிறழ்வும் உருவாகியுள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் திண்டாடுகின்றன. இலங்கையிலும் பல பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. குறிப்பாக பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இதனால் மக்களின் வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. கோதுமா மா விலை உயர்வானது, பெருந்தோட்ட மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல ‘காஸ்’ பிரச்சினையும் பெரும் பிரச்சினையாக உள்ளது. எந்நேரத்தில் எந்தப் பாகம் வெடித்துச் சிறதும் எனத் தெரியவில்லை. இந்நிலைமைக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்புக்கூறவேண்டும்.
விஞ்ஞானபூர்வமான நடைமுறைகளை அவர்கள் முறையாகப் பின்பற்றியிருந்தால் இந்நிலைமையைத் தவிர்த்திருக்கலாம். இது மனித உயிர்களுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே, உறுதியான தீர்வை அரசு முன்வைக்க வேண்டும்.
அதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ‘டோர்ச்’ (மின்சூளம்) சின்னம் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று ‘பெட்டரிகளும்’ இயங்கு நிலையில் இருந்தால்தான் மின்சூளத்தால் பிரகாசமாக ஒளியைப் பாய்ச்ச முடியும். அதேபோல் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளுக்குமிடையில் சிறந்த புரிந்துணர்வு உள்ளது. 6 வருடங்களாகக் கூட்டணியாகப் பயணிக்கின்றோம். இனி மின்சூளம் ஏந்தி வருவோம். மக்களைச் சூழ்ந்துள்ள இருளை அகற்றி, ஒளியைப் பாய்ச்சும் விதத்தில் எமது பயணம் தொடரும்” என்றார்.