ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை யாழில் ஆரம்பித்த சம்பிக்க! – பொதுவேட்பாளராக அவரைக் களமிறக்க எதிரணிகள் வியூகம்
வடக்குக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளார் என அறியமுடிந்தது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொதுவேட்பாளராக சம்பிக்க ரணவக்கவைக் களமிறக்கத் தெற்கில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதற்கான முன்னாயத்த வியூகங்களில் எதிரணிகள் களமிறங்கியுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள – பௌத்த மக்கள் மத்தியிலும், பௌத்த தேரர்கள் மத்தியிலும் சம்பிக்கவுக்குத் தனியான இடம் இருப்பதால் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக அவரைக் களமிறக்க எதிரணிகள் தீர்மானித்துள்ளன எனவும் கூறப்படுகின்றது.
அவரது 47 ஆவது படையணியின் பெயரிலேயே அவர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
இற்குச் சம்மதம் தெரிவித்துள்ள சம்பிக்க, கள நிலைமைகளை நேரில் ஆராய நாடு முழுவதற்கான பயணங்களைத் தற்போது ஆரம்பித்துள்ளார்.
அதன் ஓர் கட்டமாகவே அவர் வடக்குக்கு விஜயம் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (04) அவர் யாழ். நகரில் விநியோகித்த துண்டுப்பிரசுரங்களில் இந்த அரசையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற சாரப்பட கருத்துக்கள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.