சஜித் போல் சம்பிக்கவும் தோல்வியடைவார்; அடுத்த தடவையும் கோட்டாபயவே வெற்றி!
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொதுவேட்பாளராகச் சம்பிக்க ரணவக்க போட்டியிட்டால் சஜித் பிரேமதாஸ போல் நிச்சயம் படுதோல்வியடைவார் என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
அடுத்த தடவையும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே களமிறங்குவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்தத் தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்சவே அமோக வெற்றியடைவார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொதுவேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவைக் களமிறக்கத் தெற்கில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும், வடக்குக்கு தற்போது பயணம் மேற்கொண்டுள்ள சம்பிக்க ரணவக்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த தடவை ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னரே சஜித் பிரேமதாஸ நாட்டின் 24 மாவட்டங்களிலும் சூறாவளிபோல் சுற்றித் திரிந்தார்; தேர்தல் பிரசார மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால், இறுதியில் அவர் மக்களால் தோற்கடிக்கப்பட்டார்.
சஜித் பிரேமதாஸ போல் ஜனாதிபதி பதவி ஆசையில் தற்போது சம்பிக்க ரணவக்கவும் கிளம்பியுள்ளார் போல் தெரிகின்றது. அவரும் சஜித் போல் படுதோல்வியடைவார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வரிசையில் சம்பிக்க மட்டுமன்றி பல பேர் களமிறங்கினாலும் அவர்களைத் தோற்கடித்து மீண்டும் ஜனாதிபதிக் கதிரையில் கோட்டாபய ராஜபக்ச அமருவார். சிங்கள – பௌத்த மக்களின் அமோக வாக்குகள் கோட்டாபய ராஜபக்சவுக்கே கிடைக்கும். அதை எவரும் தட்டிப் பறிக்க முடியாது” – என்றார்.