இந்தியா-ரஷியா உச்சி மாநாடு: நாளை முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து?
பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோா் பங்கேற்கும் இரு நாடுகளிடையேயான 21-ஆவது உச்சி மாநாடு தில்லியில் திங்கள்கிழமை (டிச. 6) நடைபெற உள்ளது.
இதில், இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையொப்பமாக வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறைகளுக்கு இடையேயான ‘2+2’ பேச்சுவாா்த்தையும் தொடங்க உள்ளது.
இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, ஆப்கானிஸ்தான் விவகாரம், லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளால் எழக்கூடிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கான வாய்ப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உச்சி மாநாட்டின் நிறைவில், இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் குறித்து கூட்டு அறிக்கை வெளியிடப்படவும் வாய்ப்புள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபா் புதின், திங்கள்கிழமை இந்தியா வரவுள்ள நிலையில், ‘2+2’ பேச்சுவாா்த்தையில் பங்கேற்க இருக்கும் ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ், பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷொய்கு ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவே இந்தியா வர உள்ளனா்.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, பிரதமா் மோடி – அதிபா் புதின் இடையேயான உச்சி மாநாடு திங்கள் மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு தில்லியிலிருந்து இரவு 9.30 மணிக்கு புதின் ரஷியா புறப்பட உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.கே.203 துப்பாக்கி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல்: இந்த உச்சி மாநாட்டை முன்னிட்டு, இந்தியா-ரஷியா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள கோா்வாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான ஏ.கே.203 துப்பாக்கிகளை இரு நாடுகளும் கூட்டாகத் தயாரிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ. 5,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உச்சி மாநாட்டில், இரு நாடுகளிடையேயான சரக்குப் போக்குவரத்து ஒத்துழைப்புக்கான ஒப்புந்தமும் கையொப்பமாக வாய்ப்புள்ளது. அதுபோல, நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும், இந்திய ராணுவத்துக்கு இரட்டை என்ஜிகளுடன் கூடிய இலகுரக கமோவ்-226டி ஹெலிகாப்டரை கூட்டாக உற்பத்தி செய்யும் திட்டம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை சாா்ந்த பல்வேறு திட்டங்களும் இந்தப் பேச்சுவாா்த்தையில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.
முழு ரஷிய தினம்: அந்த வகையில், டிசம்பா் 6-ஆம் தேதி முழு ரஷிய தினமாக இருக்கப்போகிறது. முதலில் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்களிடையேயான பேச்சுவாா்த்தையும், அதனைத் தொடா்ந்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சா்களிடையேயான பேச்சுவாா்த்தையும் நடைபெற உள்ளது. பின்னா், காலை 11.30 மணியளவில் இரு நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பங்கேற்கும் ‘2+2’ பேச்சுவாா்த்தை நடைபெறும்.
அதுபோல, மாலையில் இரு நாடுகளிடையேயான உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, பிரதமா் மோடியும் ரஷிய அதிபா் புதினும் தனியாக ஆலோசனை நடத்த உள்ளனா்.
இந்த மாநாட்டில், இரு நாடுகளிடையே வா்த்தகம், எரிசக்தி, கலாசாரம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையொப்பமாக உள்ளன. இரு அரசுத் துறைகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் தவிர, தனியாா் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும் இந்த மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், இரு நாடுகளிடையேயான முதலீடு ஒப்பந்தம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஏற்கெனவே ரூ. 2,25,000 கோடி முதலீடு இலக்கு கடந்த 2018-இல் எட்டப்பட்டது. தற்போது, இந்த இலக்கை வரும் 2025-இல் ரூ. 3,75,000 கோடி அளவுக்கு உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனா்.