எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: காவல்நிலையத்தில் கொலை முயற்சி புகார்
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி திரும்பியபோது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. அமமுக பொறுப்பாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
உறுதிமொழி ஏற்றப் பின்னர் எடப்பாடிபழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கார்களில் புறப்பட்டு சென்றனர். அப்போது, எடப்பாடி பழனிசாமி காரை சிலர் முற்றுகையிட்டு சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். மேலும், கற்கள், காலணி ஆகியவற்றை காரின் மீது வீசி தாக்குதல் நடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதிமுகவின் அம்மா பேரவை துணை செயலாளர் மாறன் என்பவர் மெரினா கடற்கரையில் புகார் அளித்துள்ளார். புகாரில், எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை சூழ்ந்துகொண்டு அமமுகவினர் தாக்குதல் நடத்தினர் என்றும் எடப்பாடி பழனிசாமியை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். அமமுக பொறுப்பாளர் மீது இந்த தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.