தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரியில் மிதமான மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும், இதனால் வடமேற்கு வங்கக்கடல், அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்க கடலில் நிலை கொண்டிருந்த ‘ஜாவத்’ புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததை அடுத்து ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் கனமழை பெய்தது. ஒடிசாவில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின.
மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான ஜாவத் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஒடிசாவின் கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. இது ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் புரி கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்த நிலையில், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இதன்காரணமாக ஒடிசாவின் கடலோர மாவட்டங்களான கஞ்சம், புரி, கோர்தா, ஜகத்சிங்பூர், பத்ரக் உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக பாரதீப் நகரில் 20 சென்டி மீட்டர் மழை பதிவானது. தொடர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின.
அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நெற்பயிர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சேதமடைந்த விளைநிலங்களை கணக்கிட்டு 7 நாட்களுக்குள் அறிக்கையளிக்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.