ஒமைக்ரான் தொற்று : தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று நுழைவதைத் தடுக்கும் நோக்கில், மாநில எல்லைகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒமைக்ரான் குறித்து மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை என்று, மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதால், நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரு மாநில எல்லைகளான கக்கநள்ளாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும் செய்யப்படுகிறது. பேருந்தில் வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வாகனங்கள் மீது கிருமிநாசினியும் தெளிக்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடி வழியாக, கேரளா மற்றும் தமிழகம் இடையே தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். இதையடுத்து, நோய்ப்பரவலைத் தடுக்க அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு டோஸ் மட்டுமே செலுத்தி இருந்தால், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு பிறகே அனுமதி வழங்கப்படுகிறது.

இதனிடையே, சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நாகர்கோவிலைச் சேர்ந்த அந்த நபர், ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் வந்த அவரது குடும்பத்தினர் இரண்டு பேரும், முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா முதல் இரண்டு அலைகளின் போது, மக்களுக்கு சேவையாற்றிய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனாவை கட்டுப்படுத்தியதில் தன்னார்வலர்களின் தொண்டும், சேவையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என பாராட்டினார்.

தொற்று பரவலைத் தடுக்க மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், தமிழகத்தில் 12 ஆய்வகங்களில் RTPCR மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.