ஜனநாயக மக்கள் முன்னணி அரசியல் குழு கூட்டம் மற்றும் பதவி நியமனங்கள்.
கட்சியை சாத்தியமான அனைத்து மாவட்டங்களிலும் பலப்படுத்துவதுடன், ஜனநாயக மக்கள் முன்னணி அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியை ஏனைய பங்காளி கட்சிகளுடன் இணைந்து பலமான தேசிய அரசியல் இயக்கமாக கட்டி எழுப்பும் நோக்கில் கடுமையாக உழைக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழுவில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
கட்சி தலைவர் மனோ கணேசன் தலைமையில் நேற்று, கொழும்பு பிரைட்டன் விடுதியில் நடைபெற்ற அரசியல் குழு கூட்டத்தின் போது புதிய பதவி நியமனங்கள் வழங்கப்பட்டு, கட்சி மற்றும் கட்சி உள்ளடங்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வளர்ச்சி தொடர்பில் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,
கட்சியின் செயலாளர்-நாயகமாக பணி செய்து வந்த கட்சியின் முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் கே. டி. குருசாமி, கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் உப தலைவராக பணி செய்து வந்த கட்சியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி. பாஸ்கரா, சிரேஷ்ட உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் புதிய இரண்டு இணை உப தலைவர்களாக எம். சந்திரகுமார், எஸ். சசிகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கட்சியின் பதவி நிலை வகிபாகங்கள் மீண்டும் அரசியல் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டன. அதன்படி கட்சியின் தலைவர்- மனோ கணேசன், பிரதி தலைவர் எம். வேலு குமார், பொது செயலாளர் கே. டி. குருசாமி, தேசிய அமைப்பாளர் பிரகாஷ் கணேசன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன, தவிசாளர் ஏ. ஜெயபாலன், நிதி செயலாளர் எஸ் கணேசன், சிரேஷ்ட உப தலைவர் சி. பாஸ்கரா, இணை உப தலைவர் எம். சந்திரகுமார், இணை உப தலைவர் எஸ். சசி குமார், பிரசார செயலாளர் எம். பரணிதரன், மகளிர் விவகார செயலாளர் மஞ்சுளா பெருமாள், இளைஞர் விவகார செயலாளர் ஜி. விஷ்ணுகாந்த் ஆகிய பதவிகளுக்கு பெயர் குறிப்பிடப்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து, எம். பால சுரேஷ் குமார், லோரன்ஸ் பெர்னாண்டோ, ஆர். கமலேஸ்வரன், எசக்கி குமார் ஜெயராமன், எம். பரமசிவம், எஸ். இருளப்பன், எஸ். பாலச்சந்திரன், எம். அன்டனி ஜெயசீலன் ஆகியோரும் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் மாவட்ட அமைப்பாளர்களாக, எம் பால சுரேஷ் குமார்-கொழும்பு, எஸ். சசி குமார்-கம்பஹா, எம். பரமசிவம்-கண்டி, எம். சந்திரகுமார்-இரத்தினபுரி, எம். பரணிதரன்-கேகாலை, எம். அன்டனி ஜெயசிலன்-களுத்துறை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பெயர் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் உடனடியாக உட்கட்சி கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அமைப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். மாத்தளை, புத்தளம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு விரைவில் அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.