நாகாலந்து துப்பாக்கிச் சூடு- மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் பணிபுரியும் சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை மாலை வேலையை முடித்து விட்டு திரும்பியபோது, மியான்மர் பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 8 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பாதுகாப்பு படையினர் வாகனங்களை அடித்து உடைத்தனர்.
இந்த கலவரத்தில் பொதுமக்கள் 5 பேர் மற்றும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படை முகாமுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த கலவரம் காரணமாக நாகாலாந்தில் பதற்றம் நீடிக்கிறது. மோன் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 5-க்கும் மேற்பட்டவர்கள் கூடுவதற்கும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற வாகனங்களை இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சிறப்பு ராணுவப் படைவினர் மோன் மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். இந்த நிலையில், பொதுமக்களை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியதாக ராணுவத்தினர் மீது மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகலாந்தில் நிலவும் பதற்றம் காரணமாக அங்கு தொலை தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நாகாலாந்து விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.