தமிழகத்தில் பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – தகவல்
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 21 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு வரும் நிலையில், வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளது. அதைத்தொடர்ந்து ஜனவரி மூன்றாவது வாரத்தில் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட்டு பிப்ரவரி மாதத்தில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி மற்றும் நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை இறுதி செய்யும் பணிகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. மழை, வெள்ள நிவாரணத் தொகை, பொங்கல் தொகுப்பு உள்ளிட்ட பணிகளை ஜனவரி 15ம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.