பலவீனத்தை மறைக்க அடக்குமுறையில் அரசு! – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு.
அரசு தனது பலவீனத்தை மறைக்க, பாராளுமன்றத்தில் அடக்குமுறையை – அராஜகத்தை கையில் எடுத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்தார்.
அரசுக்கு எதிராகப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பாராளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. இதன்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டின் ஜனநாயகத்தின் உயரிய தளம் பாராளுமன்றம். அங்கே மக்களது பிரச்சினைகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான பூரண வாய்ப்பு காணப்பட வேண்டும். கருத்து சுதந்திரம் பூரணமாக பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான வசதியை சபாநாயகர் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். ஆனால், இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்களால் மக்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அரச தரப்பின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இந்தச் சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் அதனது பங்காளிக் கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறி பாராளுமன்ற அமர்வைப் பகிஷ்கரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று அரசில் உள்ள அமைச்சர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது தேர்தல் தொகுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. கிராமத்துக்கு, நகரத்துக்குச் சென்று மக்களைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரச தரப்பு உறுப்பினர்கள் குழப்பமடைந்த நிலையில் உள்ளனர். தமது விரக்தியை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது சுமத்தப் பார்க்கின்றனர். நாம் கேட்பது உங்களால் முடியுமாக இருந்தால் மக்களிடம் செல்லுங்கள். மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விடை கூறுங்கள். மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வையுங்கள். அதனை விடுத்து அடிதடியால் தீர்வுகளை எட்ட முடியாது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக முன்வைப்பதற்கான சூழ்நிலையை சபாநாயகர் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இலங்கை பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியாக உறுப்பினர்களுக்குக் காணப்படும் கருத்துசி சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
அதுவே நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதைக் கொண்டு வந்து தரும். அதேபோல் சர்வதேசத்துக்கு எமது நாட்டை பற்றிய சரியான செய்தியைப் பெற்றுக்கொடுக்கும். அதனை விடுத்து மக்கள் பிரதிநிதிகளின் கருத்துச் சுதந்திரத்தை அடக்கி ஒடுக்கி பிரச்சினைகளை மூடிமறைத்து இந்த அரசை முன்கொண்டு செல்ல முடியும் என நினைப்பது வெறும் சிறுபிள்ளைத்தனமான செயலாகும்” – என்றார்.