பிக் பேஷ் ஜோஷ் பிலீப்ஸ் அதிரடியில் இமாலய வெற்றியைப் பெற்றது சிட்னி சிக்சர்ஸ்.
மிகப்பிரபலமான டி20 கிரிக்கெட் லீக் தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 11ஆவது சீசன் நேற்றுமுதல் தொடங்கியது. இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் – சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜோஷ் பிலீப்ஸ், ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜோஷ் பிலீப்ஸ் 83 ரன்களையும், ஹெண்ட்ரிக்ஸ் 76 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் இமாலய இலக்கை துரத்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தொடக்கம் முதல் எதிரணி பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 11.1 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 61 ரன்களை மட்டுமே எடுத்தது. சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் ஸ்டீவ் ஓகீஃப் 4 விக்கெட்டுகளையும், சீன் அபேட் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஜோஷ் பிலீப்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.