கொரோனாவை விட இன்னும் கொடிய வைரஸ்கள் உருவாகக்கூடும் .
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புது வகையான கொரோனா வைரசான ஒமைக்ரான் தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட், பெருந்தொற்றுகள் குறித்து உலக நாடுகளுக்கு எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு வைரஸ் நம் உயிரையும் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துவது இது கடைசியாக இருக்காது. உண்மை என்னவென்றால், அடுத்து வருவது இன்னும் மோசமானதாக இருக்கலாம். அது அதிகம் பரவக்கூடியதாகவோ அல்லது கொடியதாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கக்கூடும்.
நாம் அடைந்திருக்கும் பொருளாதார இழப்புகள், தொற்றைத் தடுப்பதற்கான நிதி இல்லை என்பதை உணர்த்துகிறது. பெருந்தொற்றால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க, அதிக நிதி தேவைப்படும். ஒமைக்ரான் கொரோனா திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைந்த செயல்திறன் கொண்டதாகவே இருக்கும். அதுவரை கவனத்துடன் இருப்பதோடு புதிய கிருமிப்பரவலின் வீரியத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் நாம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.