வைகை ஆற்றில் 12,000 கனஅடி நீர் திறப்பு : 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மதுரை உட்பட 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோரிப்பாளையம்-செல்லூர் சாலையில் போக்குவரத்து துண்டிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணை ஏற்கெனவே நிரம்பியதால் தற்போது அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

சுமார் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டோடுகிறது. ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரிப்பால் திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக 3 தரைப்பாலங்கள் மற்றும் வைகை கரையோரம் உள்ள அணுகு சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் வைகை ஆற்றை ஒட்டி அமைந்துள்ள மீனாட்சி அரசு கல்லூரி சாலையின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என, மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை கொட்டியது. குற்றாலம், புளியரை, மேக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு பெய்த கனமழையால், அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.