எகிப்திய பாதுகாப்பு அமைச்சர் – இலங்கை பாதுகாப்பு செயலாளருக்கிடையிலான சந்திப்பு…
எடெக்ஸ் 2021 என்றழைக்கப்படும் எகிப்து பாதுகாப்பு கண்காட்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இலங்கை தூதுக்குழுவிற்கு தலைமை வகித்த பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மொஹமட் சாக்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
2021 நவம்பர் 30ம் திகதி நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்தல், புலனாய்வு தகவல் பகிர்வு, பாதுகாப்பு படைகளுக்கிடையிலான பயிற்சி, உயர்மட்டப் பயணங்கள் உள்ளிட்ட விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய உயர்மட்ட தூதுக்குழு எகிப்துக்கு விஜயம் செய்தது இதுவே முதற் தடவையாகும். பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான இந்த உயர்மட்ட தூதுக் குழுவில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் எஸ்.கே. பத்திரன, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க உள்ளிட்டோர் அங்கம்வகித்தனர். மேலும், அடுத்த வருடம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு எகிப்து பாதுகாப்பு அமைச்சருக்கு இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் அழைப்பு விடுத்தார்.
எகிப்து அரபுக் குடியரசின் ஜனாதிபதி மேதகு அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியின் தலைமைத்துத்தின் கீழ் இரண்டாவது முறையாக நடைபெற்ற எகிப்து பாதுகாப்புக் கண்காட்சி (எடெக்ஸ்-2021) உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான பாதுகாப்புத் தயாரிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் என்பவற்றை காட்சிப்படுத்தியது. இதன்போது நீர், தரை மற்றும் ஆகாயம் என்பவற்றில் பயன்படுத்தும் யுத்த உபகரணங்கள் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் எகிப்துக்கான இலங்கைத் தூதுவர் எம்.கே பத்மநாதன், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், இலங்கை மற்றும் எகிப்து தூதரக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.