சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ரூ.1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு – வருமானவரித்துறை தகவல்
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி சோதனை முடிந்த நிலையில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பிரபல வணிக நிறுவனமாக விளங்கி வரும் சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு இரண்டு அணிகளாக பிரிந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
வரி ஏய்ப்பு தொடர்பாகவும் வரி ஏய்ப்பு செய்த பல கோடி ரூபாய் பணத்தை தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்ததால் இந்த சோதனை நடைபெற்றது. புரசைவாக்கம் பகுதியில் சூப்பர் சரவணா ஸ்டோருக்கு சொந்தமான 3 இடங்கள் மற்றும் தி.நகரில் 3 இடங்களில் என பல்வேறு இடங்களில் உள்ள கடைகள், அலுவலகங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதும் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணத்தில் தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் மேலும் பல்வேறு பகுதிகளில் இடங்கள் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இந்த சோதனை தொடர்பாக பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியும் சென்றனர்.
இந்நிலையில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர்.
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில், பல ஆண்டுகளாக விற்பனையை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு நடைபெற்று வந்திருக்கிறது. 150 கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் வராத ஆடைகள், நகைகள் வாங்கப்பட்டுள்ளன.
மேலும் நகைகள் செய்ய கூடுதல் கட்டணம் செலுத்தியதாக சித்தரித்து 80 கோடி ரூபாய் மதிப்பில் போலி பில்களும் உருவாக்கப்பட்டிருந்தன, இந்த சோதனையின் போது கணக்கில் வராத 10 கோடி ரூபாய் ரொக்கமும், 6 கோடி மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடர்ந்து வருவதாக தெரிவித்தனர்.