பண்டிகைக் காலத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படவும்: உபுல் ரோஹண.
மக்கள் சுகாதார ஆலோசனைகளுக்கு இணங்காத பட்சத்தில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தொற்றாளர்களின் ஆபத்து அதிகரிக்கலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கை யிலான பாதிக்கப்பட்டவர்கள் தினமும் கண்டறியப்படுவதாக அவர் கூறினார்.
“எவ்வளவு சுகாதார ஆலோசனைகள் கொடுத்தாலும், எவ்வளவு அழுத்தமாக இருந்தாலும், ஏப்ரல், டிசம்பரில் இதே நிலைதான் தொடர்கிறது. எனவே இந்தப் பண்டிகைக் காலத்தை மக்கள் அதே போன்று கொண்டாட முயல்வதாகக் காணப்படுகின்றது. நாம் ஒரு பெரிய பேரழிவை நோக்கிச் செல்கிறோம். சமூகத்தின் பல பகுதிகளில் தொற்றுகள் பதிவாகியுள்ளன. நாளாந்தம் ஊடகங்களில் வெளியாகும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து இதை கற்பனை செய்து பார்க்க வேண்டாம். தரையிலுள்ள பெரும்பாலான சூழ்நிலைகள் ஆபத்தானவை. நோயாளிகள் அதிகளவில் பதிவாகி வருகின்றனர். எனவே தேவையற்ற பொதுக் கூட்டங்களை வைத்து சுகாதார அறிவுறுத்தலை மீறி இவ்விதம் பண்டிகைகளைக் கொண்டாட முனைந்தால் 2022ல் இந்தப் பேரழிவு சூழ்நிலையில் பாதி விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை வலியுறுத்து கிறேன்.
எனவே, பொதுமக்கள் சுய தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தி பண்டிகைகளைக் கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லையேல் நமக்கு நெருக்கமானவர்களை இழந்து விடுவோம். இல்லாவிட்டால், பண்டிகைக் காலத்தை தனிமைப்ப டுத்தல் மையங்களிலும், சிகிச்சை மையங்களிலும் கழிக்க நேரிடும் என்பதை வலியுறுத்துகிறோம்.
எதிர்காலத்தில் சுகாதார சட்டத்தை மீறி பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் அவ்வாறான இடங்களுக்குள் பிரவேசித்து சுகாதார சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.