நன்னீர் மீன்குஞ்சுகள் விடும் திட்டம் அரசாங்க அதிபரால் ஆரம்பித்து வைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் (07) தெரிவுசெய்யப்பட்ட ஐந்து குளங்களில் நன்னீர் மீன்பிடித்துறையினை ஊக்குவிக்கும் முகமாக மீன்குஞ்சுகள் விடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேறாங்கண்டல்குளம், ஐயன்கன்குளம், ஆலங்குளம், அம்பலப்பெருமாள்குளம், தென்னியன்குளம்,கோட்டை கட்டியகுளம் ஆகிய குளங்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் மீன் குஞ்சுகளை விடுகின்ற செயல்திட்டத்தை உலக உணவுத்திட்டம் முன்னெடுத்துள்ளது.
இதன் முதல் கட்டமாக இன்றைய தினம் அம்பலப்பெருமாள் குளத்தில் 75 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டு இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
துணுக்காய் பிரதேச செயலாளர் ஆ.லதுமீரா அவர்களுடைய தலைமையில் இடம்பெற்ற குறித்த திட்டத்தை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மாவட்ட முகாமைத்துவ அலகின் உலக உணவு திட்ட பணிப்பாளர் திருமதி.பவானி கணேசமூர்த்தி, உலக உணவுத்திட்ட உப அலுவலகப் பணியாளர் வ.கஜானனன், NAQDA நிறுவனத்தின் மாவட்ட விரிவாக்கல் உத்தியோகத்தர் சங்கீதன் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர் .
KOICA நிறுவனத்தின் நிதிஅனுசரனையில் உலக உணவுத் திட்டம் மற்றும் NAQDA நிறுவனம் இணைந்து செயல் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
இத்திட்டத்தினூடாக கடந்த வருடமும் சுமார் எட்டு லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டநிலையில் அதன் இரண்டாம் கட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் குறித்த மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.