தேர்தல்கள் ஆணைக்குழுவின் உபாயமுறை மூலோபாயத் திட்ட கலந்துரையாடல்.
கிளிநொச்சி மாவட்டச்செயலக பயிற்சி மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் கலந்துரையாடலானது இடம்பெற்றது. இதன் போது தலைமையுரையாற்றிய தேர்தல்களின் போதான தெரிவத்தாட்சி அலுவலரும் தேருநர் இடாப்பு மீளாய்வின் போதான பதியும் அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் எங்களுக்கு இருக்கின்ற உரிமைகளில் வாக்குரிமையானது மிக முக்கியமானது, அந்த உரிமையின் மூலமாக நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துபவர்களாக வாக்காளர்கள் உள்ளனர்,தேர்தலுக்கான தயார்ப்படுத்தல் வேலைத்திட்டங்களின் பொருட்டாக தேர்தல்கள் ஆணைக்குழுவானது மக்களிடமிருந்தான கருத்துக்களை பெற்று மூலோபாயத்திட்டத்தினை வரையும் பொருட்டாக இந்த கலந்துரையாடல் அமைந்துள்ளதாகவும் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பான விளக்கவுரையினை கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு.வி.கு.வி.ஞானதயாளன் வழங்கியிருந்தார். தொடர்ந்து கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்களில் அரச உத்தியோகத்தர்கள்,இளைஞர்கள்/மாணவர்கள்,மாற்றுவலுவுடையோர்,பெண்கள், சமூகமட்ட அமைப்புக்கள்/முதியோர்,ஊடகவியலாளர்கள்,கண்காணிப்பாளர்கள்,அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் என்றவாறாக அந்தந்த துறைசார்ந்து 8 குழுக்கள் அமைக்கப்பட்டு குழுச்செயற்பாட்டின் ஊடாக கருத்துக்கள் பெறப்பட்டன.இவ்வாறு பெறப்பட்ட கருத்துக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.