ஆஷஸ் மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு!
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று உள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சினால் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனால் இங்கிலாந்து அணி 50.1 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ஸ்டார்க், ஹசில் வுட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இதையடுத்து மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் தடைபட்டது. அதன்பின் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் 50.1 ஓவர்களிலேயே முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனால் நாளை நடைபெறும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.