நாடாளுமன்ற விவாதத்துக்கு மத்திய அரசு அஞ்சுகிறது: சோனியா குற்றச்சாட்டு
எல்லையில் ஆக்கிரமிப்பு, விவசாயிகள் போராட்டம், விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அஞ்சுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தவறிழைத்ததாகக் கூறி நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளைச் சார்ந்த 12 மாநிலங்களவை எம்.பிக்கள் இடைநீக்கம் செய்திருப்பது மூர்க்கத்தனமானதாகும். இது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கும், அரசியல் சாசனத்துக்கும் முரணானது. இதுகுறித்த எதிர்ப்பை மாநிலங்களவைத் தலைவருக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் என்பது விவாதங்கள் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வளிக்கக் கூடியதாகும். ஆனால், தற்போதைய மத்திய அரசு விவாதங்களுக்கு தயாராக இல்லை. விவாதங்களின்போது எதிர்க்கட்சிகள் கேட்கும் சிக்கலான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று அரசு அஞ்சுகிறது.
எல்லையில் ஆக்கிரமிப்புகள், அண்டை நாடுகளுடனான சிக்கல்கள், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, விவசாயிகள் போராட்டம், கரோனா தீநுண்மிப் பரவல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. ஆனால் அரசுத் தரப்பு விவாதங்களைத் தவிர்க்கவே விரும்புகிறது.
சென்ற ஆண்டு விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்போதும் இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சட்டங்கள் ரத்தானதற்கு விவசாயிகளின் தீவிரமான போராட்டமே காரணம்.
இதில் 700-க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையான, விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடி அரசு இதுகுறித்து தீவிரமாகச் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு நாட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கிறது. தற்போது மத்திய அரசு மேற்கொண்ட விலைக்குறைப்பு போதுமானதல்ல. ஏற்கெனவே சிரமத்திலுள்ள மாநில அரசுகளின் மீது பாரம் சுமத்தவே மத்திய அரசு முயற்சிக்கிறது. தவிர (புதிய நாடாளுமன்றக் கட்டடம் போன்ற) தேவையற்ற கவர்ச்சிகரமான திட்டங்களுக்கு மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் மத்திய அரசு வாரி இறைக்கிறது.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே, விமான நிலையங்கள் ஆகியவை கடந்த 70 ஆண்டுகளாக தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்பட்டு வந்தது. அவற்றை தனியார்மயம் என்ற பெயரில் மத்திய அரசு விற்கிறது. உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பால் ஏற்கெனவே இந்தியப் பொருளாதாரம் மீது தாக்குதல் கொடுத்த மோடி அரசு, சரக்கு சேவை வரி அமலாக்கம் (ஜிஎஸ்டி) போன்ற தவறான நடவடிக்கைகளால் மோசமான பாதையில் தொடர்ந்து நடையிடுகிறது.
கொரோனா பெருந்தொற்றால் அடித்தள மக்கள் கோடிக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறு, குறு, மத்தியதர தொழில் நிறுவனங்கள் செயல்படவே இயலாமல் தத்தளிக்கும் நிலையில், பொருளாதாரம் மீட்சி அடைந்து வருவதாக அரசு கூறுவது நகைப்பை வரவழைக்கிறது. யாருடைய பொருளாதாரம் மீண்டுள்ளது? சில பெரு நிறுவனங்களின் அதீத வளர்ச்சியும் பங்குச்சந்தையின் அசுர வளர்ச்சியும் பொருளாதார மீட்பின் அடையாளங்கள் அல்ல. தொழிலாளர்களின் நலனைப் புறக்கணித்துப் பெறும் இந்த வளர்ச்சியால் சமூகம் அடையும் லாபமென்ன என்பதே கேள்வி.
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இயக்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையான இலக்கை அடைவதாகத் தெரியவில்லை. இதுவரை கிடைத்துள்ள அனுபவங்களின் அடிப்படையில், புதிய ரக கரோனா தொற்று பரவும் நிலையில், இரண்டு தவணை தடுப்பூசிகளை நாட்டு மக்கள் அனைவருக்கும் செலுத்த அரசு தனது முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
நாகாலாந்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது தொடர்பாக மத்திய அரசு வருத்தம் தெரிவித்தால் போதாது. இச்சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார்.
இதனிடையே, முப்படை தலைமை தளபதியின் மரண துயரத்தால், வியாழக்கிழமை தனது பிறந்தநாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொண்டாட மாட்டார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.