தந்தையின் வழியில் பணியைத் தொடங்கிய விபின் ராவத்!
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், தந்தையின் பிரிவிலேயே ராணுவப் பணியைத் 1978-ஆம் ஆண்டு தொடங்கினார்.
பணியைத் தொடங்கிய ராவத்:
விபின் ராவத்தின் முழுப் பெயர் விபின் லக்ஷ்மண் சிங் ராவத் ஆகும். தேசிய பாதுகாப்பு அகாதெமி மற்றும் இந்திய ராணுவ அகாதெமியில் பட்டம் பெற்ற பிறகு, 1978-இல் இந்திய ராணுவத்தில் விபின் பணியில் சேர்ந்தார். 11-ஆவது கோர்க்கா ரைஃபிள்ஸின் 5-ஆவது பட்டாலியனாக அவருடைய தந்தை லக்ஷ்மண் சிங் ராவத் இருந்த நிலையில், அதே பிரிவில் விபின் ராவத்தும் சேர்க்கப்பட்டார்.
ராணுவத்தில் 40 ஆண்டு காலம் பணியில் பிரிகேட் கமாண்டர், ராணுவ தெற்கு படைப் பிரிவின் தலைமை அதிகாரி, ராணுவ நடவடிக்கை இயக்குநரக கிரேடு-2 அதிகாரி, ராணுவ செயலக பிரிவில் ராணுவச் செயலர், ராணுவ துணைச் செயலர், இளநிலை கமாண்ட் பிரிவில் முதுநிலை பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை விபின் ராவத் வகித்துள்ளார்.
ஐ.நா. அமைதி காக்கும் படையின் ஒருங்கிணைந்த பகுதியில் ஓர் உறுப்பினராகவும், காங்கோ ஜனநாயகக் குடியரசில் பன்னாட்டுப் படை அணிக்கு தலைமையும் வகித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக்குக்குப் பிறகு நாட்டின் 27-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக பதவியேற்றார். அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்தியாவின் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியில் நியமிகப்பட்டார்.
முக்கிய ராணுவ நடவடிக்கைகள்: இவருடைய தலைமையில் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய ராணுவம் மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
குறிப்பாக, இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு எதிரான இந்திய ராணுவம் கடும் நடவடிக்கைகளை எடுத்ததுடன், கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் அதிரடித் தாக்குதலை நடத்தியது.
அதுபோல, டோக்லாம் எல்லைப் பகுதியில் சீனாவின் அத்துமீறலையும் இவருடைய தலைமையிலான இந்திய ராணுவம் திறம்படக் கையாண்டது. ராணுவ அதிகாரிகளிடையேயான தொடர் பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்திய – சீன ராணுவத்தினரிடையே நல்லுறவு ஏற்படுத்துதற்கான தீவிர முயற்சிகளை விபின் ராவத் எடுத்ததோடு, கூட்டு போர்ப் பயிற்சிகளையும் மேற்கொள்ள வழி வகுத்தார். இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கான திட்டமிடலிலும் விபின் ராவத் முக்கியப் பங்காற்றினார்.
சென்னைப் பல்கலை.யில் எம்.ஃபில்.:
உத்தரகண்ட் மாநிலம் பௌரியில் 1958 ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி பிறந்த விபின் ராவத், தேசிய பாதுகாப்பு அகாதெமி மற்றும் இந்திய ராணுவ அகாதெமியில் பட்டங்களைப் பெற்றதுடன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கல்வியில் எம்.ஃபில். படிப்பையும், மீரட் சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. (ஆராய்ச்சி) படிப்பையும் முடித்துள்ளார். மேலாண்மை, கணினி துறைகளில் பட்டயப் படிப்புகளையும் மேற்கொண்டார்.