வடமாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி ஆதிக்கம்!

வடமாகாண விளையாட்டு விழா விழா 2020இன் ஓர் அங்கமான மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதலிடம் பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
வடமாகாண விளையாட்டுப்போட்டியில் முதன்முறையாக பெண்களுக்கான மல்யுத்த போட்டி நடாத்தப்பட்டு அதில் முல்லைத்தீவு முதலாமிடத்தை பெற்றுக்கொண்டதுடன் ஆண்கள் பிரிவில் சென்ற வருடமும் முல்லைத்தீவு மாவட்ட அணி முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டி நேற்று(08) காலை முல்லைத்தீவு உள்ளகவிளையாட்டரங்கில் இடம்பெற்று மாலை வெற்றிபெற்றவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக்கேடயங்களை வழங்கி வைத்தார்.
பெண்கள் பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட அணி 09 தங்கப்பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் மற்றும் வெண்கலப் பதக்கங்களையும், வவுனியா மாவட்ட அணி ஒவ்வொரு தங்கம் வெள்ளி வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டன.
ஆண்கள் பிரிவில் முல்லைத்தீவு ஆறு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வவுனியா மாவட்ட அணி ஒரு தங்கப் பதக்கத்தையும், இரண்டு வெண்கலப் பதக்கங்களையும், யாழ்ப்பாண மாவட்ட அணி ஒரு தங்கப்பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கங்களையும் மன்னார் மாவட்ட அணி ஒரு தங்கப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
இதனூடாக இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா மாவட்ட அணி இரண்டாமிடத்தையும், யாழ்ப்பாண மாவட்ட அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டதுடன் பெண்களுக்கான போட்டியில் வவுனியா மாவட்ட அணி இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.
குறித்த போட்டிகள் கொவிட் 19 பேரிடர் காரணமாக காலதாமதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.