மீண்டுமொரு கொரோனா அலையை பண்டிகைக்காலமே தீர்மானிக்கும்! சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை.
“நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையில் பாரதூரமான அதிகரிப்பு ஏற்படாவிட்டாலும் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடையாமல் காணப்படுகின்றமை அவதானத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். எனவே, பண்டிகைக் காலங்களில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம். மீண்டுமொரு கொரோனாத் தொற்று அலையைப் பண்டிகைக் காலமே தீர்மானிக்கும்.”
– இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 500 ஆகக் காணப்பட்ட நாளாந்தத் தொற்றாளர் எண்ணிக்கை தற்போது 700 வரை அதிகரித்துள்ளமை விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
தொற்றாளர் எண்ணிக்கையை இதனை விடக் குறைவடையச் செய்வதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் வெவ்வேறு சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கமைய தொற்றாளர் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது பாரியளவில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படாமை அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
மகிழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்வுகளில் விருந்துபசாரங்களின்போது கொரோனாத் தொற்று அதிகமானோருக்குப் பரவக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும்.
இதற்கு முன்னர் சிறிய கொத்தணிகள் ஏற்பட்ட அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், அலுவலகங்களில் ஒன்றாக உணவு உண்பவர்கள் மத்தியில் வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்பட்டமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
எனவே, பண்டிகைக் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளின்போது மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.