மக்களைப் பட்டினியால் சாகடிக்கப்போகும் அரசு! – ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை.
நாட்டு மக்களை இந்த அரசு பட்டினியால் சாகடிக்கப்போகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசால் நாட்டு மக்கள் பாரிய கடன் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டில் இந்த கடன் சுமையால் நாட்டினதும் , மக்களினதும் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடையும். ஐ.தே.க. ஆட்சியில் மூன்று வேளையும் உணவு உண்ட மக்கள் தற்போதைய ஆட்சியில் ஒரு வேளை உணவை உண்பதற்கும் சிரமப்படுகின்றனர்.
நல்லாட்சி அரசின் ஆட்சியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்பதற்கு உணவு இல்லை என்று மக்கள் எதிர்க்கட்சிகளிடம் குற்றம் சுமத்தியதில்லை. எனினும், தற்போது நாளாந்தம் மக்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
மக்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கியதால் நல்லாட்சி அரசை அவர்கள் கோழைகள் என்று வரையறுத்தனர். எனினும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அரசாகவே நாம் செயற்பட்டோம்.
பலருக்கு அது கோழைத்தனமாகத் தோன்றியது. அவ்வாறு எம்மைக் கோழைகள் என்று நினைத்தவர்களும் இப்போது இந்த அரசின் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எமது ஆட்சிக் காலத்தில் அரசை சமூக வலைதளங்களில் விமர்சிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. இன்று அந்த வாய்ப்பும் இல்லை.
அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடும் இளைஞர்கள் குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்படுகின்றனர். அவ்வாறில்லை என்றால் குறித்த சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்படுகின்றன. பொலிஸார் ஊடாக மக்களின் கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுகின்றது.
குரல் கொடுக்கக் கூடியவர்களை பாராளுமன்றம் செல்ல மக்கள் அனுமதிக்கவில்லை. அவர்கள் செய்த செயலின் தீவிரத்தை மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர்.
இந்த அரசு முன்னோக்கிச் செல்லப் போவதில்லை. அரசின் முட்டாள்தனமான செயற்பாடுகளால் பொதுமக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்வதற்குப் பெருமளவில் நிதியை ஒதுக்கும் இந்த அரசு தேவையான இடங்களில் பாலங்களை நிர்மாணித்துக் கொடுப்பதில்லை. இதன் காரணமாகவே கிண்ணியாவில் அந்த அசம்பாவிதம் ஏற்பட்டது.
நிதி அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம் செய்த போதிலும் , அந்நாட்டிலிருந்து எவ்வித உதவியும் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் போதியளவு நிதி கையிருப்பில் இல்லை என்பதால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடுகளில் வைத்திருப்பவர்கள் வெடிகுண்டை வீட்டில் வைத்திருப்பதைப் போல் அச்சத்துடனேயே இருக்கின்றனர்.
இலங்கையில் மேற்கொண்டிருந்த முதலீட்டினை சீனா தற்போது மாலைதீவுக்கு வழங்கியுள்ளது. மறுபுறம் இந்தியாவும் எவ்வித ஒத்துழைப்புக்களையும் வழங்கவில்லை.
இதன் காரணமாகவே ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க , நிதி அமைச்சரின் இந்திய விஜயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார். எனினும், அதற்கு அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
நாட்டில் பாரிய டொலர் தட்டுப்பாடு நிலவுகின்றது. சர்வதேச ஒத்துழைப்புகள் பூச்சியமான நிலையில் உள்ளது. இலங்கையின் நிலையற்ற செயற்பாடுகளால் சீனாவும் சினம் கொண்டுள்ளது. மறுபுறம் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கை மீது சினம் கொண்டுள்ளன.
இவ்வாறான நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய முடியும்? கிணற்றுத் தவளை போன்ற பொருளாதாரத்தில் ஒருபோதும் முன்னேற முடியாது.
கொரோனாத் தொற்றின் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏனைய பல நாடுகளும் பொருளாதார நெருக்கடியைச் சரியாக முகாமைத்துவம் செய்துள்ளன. இலங்கையில் அவ்வாறான பொருளாதார முகாமைத்துவம் இல்லை.
ஏனைய நாடுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், இலங்கை பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்” – என்றார்.