தற்போதைய பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்கவேண்டும் அரசு!
நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்னைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் அரசியலில் ஈடுபட்டுள்ள நேர்மையான, ஊழல் மோசடிகளற்ற, நாட்டை நேசிக்கும் நபர்களை ஒன்றிணைத்து விரிவான அரசியல் சக்தியொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறான ஓர் சக்தியை உருவாக்கி அதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்.
நாட்டில் தற்போது நிலவும் உரப்பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற விடயங்கள் குறித்து ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தாது அரசு தனது கடமைகளைச் செய்ய வேண்டும்.
நாட்டு மக்கள் இன்னமும் உரம் கிடைக்காது அவதியுறுகின்றனர். நாட்டின் பல பகுதிகளிலும் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும். மக்களுக்காக அரசு தனது கடமைகளைச் செய்ய வேண்டும். இதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயார்” – என்றார்.