தண்ணீர் கேட்டாரு பிபின் ராவத்.. மீட்பு பணியில் ஈடுபட்டவர் கண்ணீர் பேட்டி.
ஊட்டி: உயிருக்கு போராடிய நிலையில், பிபின் ராவத் பேச முயன்றதாகவும், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தோரிடம் “வாட்டர் ப்ளீஸ்” என்று குடிக்க தண்ணீர் கேட்டதாகவும் கூறப்படுகிறது..
நேற்றைய தினம், குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது.. விபத்தை நேரில் பார்த்த, அந்த பகுதியின் தேயிலை தோட்ட தொழிலாளர்களும், கிராம மக்களும், அதுபற்றிய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
“சுமார் 12:00 மணியளவில் 2 ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து வட்டம் அடித்து கொண்டிருந்தன. திடீரென பெரிய வெடிச்சத்தம் கேட்டதுமே, எல்லாருமே ஓடிச்சென்று பார்த்தோம். அப்போது 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தின் பின்புறத்திலிருந்து பெரிய அளவிலான தீப்பிழம்பு புகை வந்து கொண்டிருந்தது.. அதனால் வெடித்தபின் ஹெலிகாப்டர் மரத்தின் மீது மோதியதா? அல்லது மரத்தின் மீது மோதிய பின் ஹெலிகாப்டர் வெடித்ததா? என்று எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை” என்கின்றனர்.
ராணுவ வீரர்கள் கருகி விழுந்ததையடுத்து, அவர்களை மீட்கும் பணியில் முபாரக், சந்திரகுமார் உள்ளிட்ட கிராம மக்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.. இதில் 2 பேர் உயிருடன் உருக்குலைந்த நிலையில் இருந்துள்ளதாகவும், அதில் ஒருவர் தங்களுடன் பேச முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்… விபத்தில் சிக்கியதில் பிபின் ராவத் உடல் மட்டுமே பெரும்பாலும் சிதையாமல் இருந்ததால், அவர் தான் இறுதி சமயத்தில் உயிருக்கு போராடிய நிலையில் ஏதாவது பேச முயற்சித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அவரை யார் என்றே மீட்பு பணியில் ஈடுபட்ட மக்களுக்கு தெரியவில்லை.
இதனிடையே, மீட்பு பணியில் சகாயராஜ் என்பவர் ஈடுபட்டுள்ளார்.. தீயில் கருகி உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் சிலர் மீட்டு கொண்டு வந்துள்ளனர்.. அந்த 3 பேரில் ஒருவர்தான் சகாயராஜ்.. இதை பற்றி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் சொல்லும்போது, “நான் வீட்டுக்குள் இருந்தேன்.. சத்தம் கேட்டதுமே வெளியில் ஓடிவந்து பார்த்தேன்.. இன்னைக்கு வழக்கத்தைவிட பனி அதிகமாக இருந்தது.. 5 அடி துரத்தில் இருப்பவர்கள்தான் நமக்கு தெரியும்..
நான் போய் பார்த்தபோது 3 பேர் மட்டுமே உயிரோடு இருந்தனர்.. மற்றவர்கள் ஹெலிகாப்டர் உள்ளே இருந்தனர்.. வெளியில் இருந்த 3 பேருக்கு உயிர் இருந்தது.. அவர்களை கம்பளியால் சுற்றி தூக்கி கொண்டு ஓடிவந்தோம்.. அதில் ஒருவர்தான் பிபின் ராவத் என்பது எனக்கு தெரியாது.. இவ்வளவு பெரிய உயரதிகாரியை நாம தூக்கிட்டு வந்திருக்கோமா என்று அப்பறம்தான் தெரியவந்தது.. ஆனால் தூக்கிட்டு வரும்போது தண்ணி கேட்டாரு.. வாட்டர் வாட்டர் என்று கேட்டார்.. ஆனால் அந்த நேரத்தில் தரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க..அவரும் இறந்துட்டாரு என்று டிவியில் நியூஸ் வந்தப்போ எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு.. என்னால ஜீரணிக்கவே முடியல” என்றார்.
அதேபோல, சிவகுமார் என்பவரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.. இவர் ஒரு ஆங்கில சேனலுக்கு தந்த பேட்டியில் சொன்னதாவது: “நான் ஒரு பில்டிங் கான்ட்ராக்டர்.. என் மச்சான் இங்கே குன்னூரில் இருக்கிறார்.. அவரை பார்க்க வந்துட்டு இருந்தேன்.. நான் அவருக்கு போன் பண்ணதுமே ஒரு ஹெலிகாப்டர் நீ வரும் வழியில்தான் மரத்தில் மோதிடுச்சுன்னு சொன்னார்.. அவர் சொன்ன இடம் பக்கத்துலதான் இருந்தது.. அதனால் அந்த ஸ்பாட்டுக்கு நான் ஓடிச்சென்றேன்.. 20 அடி உயரத்துக்கு நெருப்பு எரிந்து கொண்டிருந்தது..
ஹெலிகாப்டரில் தீ, நெருப்பும் அதிகமாக இருந்ததால், பக்கத்தில் போக முடியவில்லை.. காஸ், எரிபொருள் எல்லாம் ஹெலிகாப்டர் பக்கத்தில் இருக்கும் என்பதால் நாங்க போகவில்லை.. அப்பறம்தான் 3 பேர் கொஞ்சம் தொலைவில் விழுந்து கிடக்கறாங்கன்னு தகவல் தெரிந்ததும் அங்கே ஓடினோம்.. 3 பேருக்குமே உயிர் இருந்தது.. உடனே நண்பர்களை அழைத்து செல்ல அங்கிருந்து வெளியே வந்தேன்.. அப்போ டவுன் இன்ஸ்பெக்டர் அங்கே வந்தார்.. அவர்கிட்ட 3 பேர் உயிருடன் இருக்காங்கன்னு சொல்லி, அந்த லொகேஷனை தந்தேன்..
பிறகு 3 பேரை காப்பாற்ற ஓடினோம்.. அவர்களை தூக்கி கொண்டு வரும்போது, அதில் ஒருவர் வலியால் துடித்து கொண்டிருந்தார்.. நான் அவரை பார்த்து, சார் கூலாக இருங்க.. நாங்க எல்லாம் இருக்கோம்னு சொன்னேன்.. காப்பாத்திடுவோம்னு சொன்னேன்.. அவர் என்னை திரும்பி பார்த்து, வாட்டர் ப்ளீஸ்-ன்னு சொன்னார்.. எங்களால தண்ணியும் தரமுடியவில்லை.. அவரை பள்ளத்தில் இருந்து உடனே பெட்ஷீட்டால் சுற்றி மேலே தூக்கி வர தான் முயற்சி பண்ணிட்டு இருந்தோம்..
3 மணி நேரம் கழித்து ஒரு ஆபிசர் வந்தார்.. அப்போ என்னை தோளில் தட்டி பிபின் சார் போட்டோவை காட்டினார்.. நீங்க காப்பாற்றியவர் நம்ம சீஃப் கமாண்டர்ன்னு சொன்னார்.. அது எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது.. நம்ம தேசத்தை காக்கக்கூடிய ஒரு தளபதி, நம்ம கிட்ட தண்ணீர் கேட்டும் என்னால தர முடியலேன்னு நினைச்சு கஷ்டமா போச்சு… அவர் இறந்ததாக டிவியில் சொன்னதுமே நைட் முழுக்க தூக்கம் வரவில்லை” என்றார் சிவகுமார்.