அரசியல் கைதிகள் விடயத்தில் பொறுப்புடன் செயற்படும் அரசு! சார்ள்ஸின் கருத்துக்கு நாமல் பதில்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான கைதிகளின் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கும், விடுதலை தொடர்பிலும் அரசு பொறுப்புடையதாக உள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நீதி அமைச்சின் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில், அமைச்சர் நாமல் ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்ச,
“மேற்படி கைதிகளின் விடயத்தில், உரிய நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கும், விடுதலை தொடர்பிலும் அரசு பொறுப்புடையதாக உள்ளது.
அது ஒரு முறைமையிலானது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அதனைச் செய்வதற்கான சட்ட நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
நீதி அமைச்சர் அதற்காகச் செயற்படுகின்றார்.
முதல் முறையாக நாம் அதனைச் செய்ய முடியும். அதனைச் செய்வோம்.
முன்னரும் அதனை நாம் செய்துள்ளோம். அரசியல் ரீதியான அறிவிப்பை நாம் வெளியிட மாட்டோம். ஏனெனில், அது எமது அரசியல் வாக்குறுதி அல்ல.
அரசியல் கட்சி என்ற அப்படையில், நீங்கள் எங்களுக்கு உதவி செய்வதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். அத்துடன், நீங்கள் ஒருபோதும் எங்களுக்கு உதவ மாட்டீர்கள்.
ஆனால், நாட்டின் பிரஜை என்ற அடிப்படையிலும், அரசு என்ற அடிப்படையிலும் எங்களுக்குப் பொறுப்பு உள்ளது. அதனை நாங்கள் நிறைவேற்றுவோம்” – என்றார்.