ஜெயலலிதாவின் வேதா இல்லம் சாவி தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு
போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு, அறிவித்தது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதேபோல, வேதா நிலையத்துக்கு இழப்பீடாக 67 கோடியே 90 லட்சம் ரூபாயும் நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யப்பட்டது.
வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சேஷசாயி, நினைவு இல்லம் அமைப்பது பொதுப்பயன்பாடும் இல்லை என்றும், ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் நினைவில்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் கூறி, வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்து கடந்த 24ம் தேதி தீர்ப்பளித்தார். மேலும் வேதா இல்லத்தின் சாவியை ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு இருந்தார்.
இதை தொடர்ந்து இன்று வேதா இல்லத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியடம் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து வேதா இல்லத்தின் சாவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.